I சாமுவேல்

1

1 எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன். 2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள்பேர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை. 3 அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்துகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே கர்த்தரின் ஆசாரியரான ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் இருந்தார்கள். 4 அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்குபோட்டுக் கொடுப்பான். 5 அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்; கர்த்தரோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார். 6 கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள். 7 அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். 8 அவள் புருஷனாகிய எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்துக் குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்றான். 9 சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான். 10 அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: 11 சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள். 12 அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான். 13 அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை; ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து, 14 அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான். 15 அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன். 16 உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம்பண்ணினேன் என்றாள். 17 அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான். 18 அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை. 19 அவர்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, ராமாவிலிருக்கிற தங்கள் வீட்டுக்குத் திரும்பிப்போனார்கள்; எல்க்கானா தன் மனைவியாகிய அன்னாளை அறிந்தான்; கர்த்தர் அவளை நினைந்தருளினார். 20 சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள். 21 எல்க்கானா என்பவன் கர்த்தருக்கு வருஷாந்தரம் செலுத்தும் பலியையும் தன் பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன் வீட்டார் அனைவரோடுங்கூடப் போனான். 22 அன்னாள் கூடப்போகவில்லை; அவள்: பிள்ளை பால்மறந்தபின்பு, அவன் கர்த்தரின் சந்நிதியிலே காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய் விடுவேன் என்று தன் புருஷனிடத்தில் சொன்னாள். 23 அப்பொழுது அவள் புருஷனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன் இஷ்டப்படி செய்து, அவனைப் பால்மறக்கப்பண்ணுமட்டும் இரு; கர்த்தர் தம்முடைய வார்த்தையைமாத்திரம் நிறைவேற்றுவாராக என்றான்; அப்படியே அந்த ஸ்திரீ தன் பிள்ளையைப் பால் மறக்கப்பண்ணுமட்டும் அதற்கு முலைகொடுத்தாள். 24 அவள் அவனைப் பால்மறக்கப் பண்ணினபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக்கொண்டு, சீலோவிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாயிருந்தது. 25 அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள். 26 அப்பொழுது அவள்: என் ஆண்டவனே, இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணின ஸ்திரீ நான்தான் என்று என் ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 27 இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார். 28 ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான்.

2

1 அப்பொழுது அன்னாள் ஜெபம்பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன். 2 கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை. 3 இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ? 4 பலவான்களின் வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள். 5 திருப்தியாயிருந்தவர்கள் அப்பத்துக்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாயிருந்தவர்களோ இனிப் பசியாயிரார்கள்; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ பலட்சயப்பட்டாள். 6 கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர். 7 கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர். 8 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார். 9 அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மௌனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை. 10 கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள். 11 பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; அந்தப் பிள்ளையோ, ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான். 12 ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை. 13 அந்த ஆசாரியர்கள் ஜனங்களை நடப்பித்த விதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்துங்காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று கூறுள்ள ஒரு ஆயுதத்தைத் தன் கையிலே பிடித்துவந்து, 14 அதினாலே, கொப்பரையிலாவது பானையிலாவது சருவத்திலாவது சட்டியிலாவது குத்துவான்; அந்த ஆயுதத்தில் வருகிறதையெல்லாம் ஆசாரியன் எடுத்துக்கொள்ளுவான்; அப்படி அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலருக்கெல்லாம் செய்தார்கள். 15 கொழுப்பைத் தகனிக்கிறதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனுஷனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சி கொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், அவித்ததை உன் கையிலே வாங்குகிறதில்லை என்பான். 16 அதற்கு அந்த மனுஷன்: இன்று செய்யவேண்டியபடி முதலாவது கொழுப்பைத் தகனித்துவிடட்டும்; பிற்பாடு உன் மனவிருப்பத்தின்படி எடுத்துக்கொள் என்று சொன்னாலும்; அவன்: அப்படியல்ல, இப்பொழுதே கொடு, இல்லாவிட்டால் பலவந்தமாய் எடுத்துக்கொள்ளுவேன் என்பான். 17 ஆதலால் அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது; மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுப்பாய் எண்ணினார்கள். 18 சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் சணல்நூல் ஏபோத்தைத் தரித்தவனாய்க் கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடை செய்தான். 19 அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக்கொண்டு வருவாள். 20 ஏலி எல்க்கானாவையும் அவன் மனைவியையும் ஆசீர்வதித்து: இந்த ஸ்திரீ கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுத்ததற்குப் பதிலாகக் கர்த்தர் உனக்கு அவளாலே சந்தானம் கட்டளையிடுவாராக என்றான்; அவர்கள் தங்கள் ஸ்தானத்திற்குத் திரும்பப் போய்விட்டார்கள். 21 அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான். 22 ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்; அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு, 23 அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது என்ன? இந்த ஜனங்கள் எல்லாரும் உங்கள் பொல்லாத நடக்கைகளைச் சொல்லக்கேட்கிறேன். 24 என் குமாரரே, வேண்டாம்; நான் கேள்விப்படுகிற இந்தச் செய்தி நல்லதல்ல; கர்த்தருடைய ஜனங்கள் மீறி நடக்கிறதற்குக் காரணமாயிருக்கிறீர்களே. 25 மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ்செய்யத்தக்கவன் யார் என்றான்; அவர்களோ தங்கள் தகப்பன் சொல்லைக் கேளாமற்போனார்கள்; அவர்களைச் சங்கரிக்கக் கர்த்தர் சித்தமாயிருந்தார். 26 சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான். 27 தேவனுடைய மனுஷன் ஒருவன் ஏலியினிடத்தில் வந்து: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், உன் பிதாவின் வீட்டார் எகிப்திலே பார்வோனின் வீட்டில் இருக்கையில், நான் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி, 28 என் பலிபீடத்தின்மேல் பலியிடவும், தூபங்காட்டவும், என் சமுகத்தில் ஏபோத்தைத் தரிக்கவும், இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் அவனை எனக்கு ஆசாரியனாகத் தெரிந்துகொண்டு, உன் பிதாவின் வீட்டாருக்கு இஸ்ரவேல் புத்திரருடைய தகனபலிகளையெல்லாம் கொடுக்கவில்லையா? 29 என் வாசஸ்தலத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என் பலியையும், என் காணிக்கையையும், நீங்கள் உதைப்பானேன்? என் ஜனமாகிய இஸ்ரவேலின் காணிக்கைகளிலெல்லாம் பிரதானமானவைகளைக் கொண்டு உங்களைக் கொழுக்கப்பண்ணும்படிக்கு, நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன் என்கிறார். 30 ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டைபண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 31 உன் வீட்டில் ஒரு கிழவனும் இராதபடிக்கு உன் புயத்தையும் உன் பிதாவின் வீட்டாருடைய புயத்தையும் நான் தறித்துப்போடும் நாட்கள் வரும். 32 இஸ்ரவேலுக்குச் செய்யப்படும் சகல நன்மைக்கும் மாறாக என் வாசஸ்தலத்திலே உபத்திரவத்தைக் காண்பாய்; ஒருபோதும் உன் வீட்டில் ஒரு கிழவனும் இருப்பதில்லை. 33 என் பலிபீடத்தில் சேவிக்க, நான் உன் சந்ததியில் நிர்மூலமாக்காதவர்களோ, உன் கண்களைப் பூத்துப்போகப்பண்ணவும், உன் ஆத்துமாவை வேதனைப்படுத்தவும் வைக்கப்படுவார்கள்; உன் வம்சத்திலுள்ள யாவரும் வாலவயதிலே சாவார்கள். 34 ஓப்னி பினெகாஸ் என்னும் உன் இரண்டு குமாரரின்மேல் வருவதே உனக்கு அடையாளமாயிருக்கும்; அவர்கள் இருவரும் ஒரேநாளில் சாவார்கள். 35 நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணி, அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன்; அவன் என்னால் அபிஷேகம்பண்ணப்பட்டவனுக்கு முன்பாகச் சகல நாளும் நடந்துகொள்ளுவான். 36 அப்பொழுது உன் வீட்டாரில் மீதியாயிருப்பவன் எவனும் ஒரு வெள்ளிப்பணத்துக்காகவும் ஒரு அப்பத்துணிக்கைக்காகவும் அவனிடத்தில் வந்து பணிந்து: நான் கொஞ்சம் அப்பம் சாப்பிட யாதொரு ஆசாரிய ஊழியத்தில் என்னைச் சேர்த்துக்கொள்ளும் என்று கெஞ்சுவான் என்று சொல்லுகிறார் என்றான்.

3

1 சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை. 2 ஒருநாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்கக்கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது. 3 தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோகுமுன்னே சாமுவேலும் படுத்துக்கொண்டிருந்தான். 4 அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி, 5 ஏலியினிடத்தில் ஓடி, இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்; அவன் போய்ப் படுத்துக்கொண்டான். 6 மறுபடியும் கர்த்தர் சாமுவேலே என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய்: இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான். 7 சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான்; கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை. 8 கர்த்தர் மறுபடியும் மூன்றாம்விசை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது கர்த்தர் பிள்ளையாண்டானைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து, 9 சாமுவேலை நோக்கி: நீ போய்ப் படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான். 10 அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான். 11 கர்த்தர் சாமுவேலை நோக்கி: இதோ, நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும். 12 நான் ஏலியின் குடும்பத்திற்கு விரோதமாகச் சொன்ன யாவையும், அவன்மேல் அந்நாளிலே வரப்பண்ணுவேன்; அதைத் தொடங்கவும் அதை முடிக்கவும் போகிறேன். 13 அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன். 14 அதினிமித்தம் ஏலியின் குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியினாலாவது காணிக்கையினாலாவது நிவிர்த்தியாவதில்லை என்று ஏலியின் குடும்பத்தைக்குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார். 15 சாமுவேல் விடியற்காலமட்டும் படுத்திருந்து, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்தான்; சாமுவேல் ஏலிக்கு அந்தத் தரிசனத்தை அறிவிக்கப் பயந்தான். 16 ஏலியோ: சாமுவேலே, என் மகனே என்று சாமுவேலைக் கூப்பிட்டான். அவன்: இதோ, இருக்கிறேன் என்றான். 17 அப்பொழுது அவன்: கர்த்தர் உன்னிடத்தில் சொன்ன காரியம் என்ன? எனக்கு அதை மறைக்கவேண்டாம்; அவர் உன்னிடத்தில் சொன்ன சகல காரியத்திலும் யாதொன்றை எனக்கு மறைத்தாயானால், தேவன் உனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்வாராக என்றான். 18 அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் அவனுக்கு மறைக்காமல், அந்தக் காரியங்களையெல்லாம் அவனுக்கு அறிவித்தான். அதற்கு அவன்: அவர் கர்த்தர்; அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான். 19 சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்துபோக விடவில்லை. 20 சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது. 21 கர்த்தர் பின்னும் சீலோவிலே தரிசனம் தந்தருளினார்; கர்த்தர் சீலோவிலே தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்.

4

1 சாமுவேலின் வார்த்தை இஸ்ரவேலுக்கெல்லாம் வந்தது. இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு விரோதமாய் யுத்தஞ் செய்யப்புறப்பட்டு, எபெனேசருக்குச் சமீபத்தில் பாளயமிறங்கினார்கள்; பெலிஸ்தரோ ஆப்பெக்கிலே பாளயமிறங்கியிருந்தார்கள். 2 பெலிஸ்தர் இஸ்ரவேலருக்கு விரோதமாய் அணிவகுத்து நின்றார்கள்; யுத்தம் அதிகரித்து, இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அவர்கள் சேனையில் போர்க்களத்திலே ஏறக்குறைய நாலாயிரம்பேர் வெட்டுண்டுபோனார்கள். 3 ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி ரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள். 4 அப்படியே கேருபீன்களின் மத்தியிலே வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துவர, ஜனங்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள்; அங்கே ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியண்டையில் இருந்தார்கள். 5 கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி பாளயத்திலே வருகிறபோது, இஸ்ரவேலரெல்லாரும் பூமி அதிரத்தக்கதாக மகா ஆர்ப்பரிப்பாய்ச் சத்தமிட்டார்கள். 6 அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர் கேட்டபோது: எபிரெயருடைய பாளயத்தில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள்; பின்பு கர்த்தரின் பெட்டி பாளயத்தில் வந்தது என்று அறிந்துகொண்டார்கள். 7 தேவன் பாளயத்தில் வந்தார் என்று சொல்லப்பட்டபடியினால், பெலிஸ்தர் பயந்து, ஐயோ, நமக்கு மோசம் வந்தது; இதற்குமுன் ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே. 8 ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்தரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே. 9 பெலிஸ்தரே, திடங்கொண்டு புருஷரைப்போல நடந்துகொள்ளுங்கள்; எபிரெயர் உங்களுக்கு அடிமைகளாயிருந்ததுபோல, நீங்களும் அவர்களுக்கு அடிமைகளாகாதபடிக்கு, புருஷராயிருந்து, யுத்தம்பண்ணுங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். 10 அப்பொழுது பெலிஸ்தர் யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேலர் முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்; மகா பெரிய சங்காரம் உண்டாயிற்று; இஸ்ரவேலிலே முப்பதினாயிரம் காலாட்கள் விழுந்தார்கள். 11 தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது; ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் மாண்டார்கள். 12 பென்யமீன் கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடி, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் தலையின்மேல் புழுதியை வாரிப் போட்டுக்கொண்டு, அன்றையதினமே சீலோவுக்கு வந்தான். 13 அவன் வந்தபோது: ஏலி ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்து வழியைப் பார்த்துக்கொண்டிருந்தான்; தேவனுடைய பெட்டிக்காக அவன் இருதயம் தத்தளித்துக்கொண்டிருந்தது. ஊரிலே செய்தியை அறிவிக்க அந்த மனுஷன் வந்தபோது, ஊரெங்கும் புலம்பல் உண்டாயிற்று. 14 புலம்புகிற இந்தச் சத்தத்தை ஏலி கேட்டபோது: இந்த அமளியின் இரைச்சல் என்ன என்று கேட்டான்; அப்பொழுது அந்த மனுஷன் தீவிரித்து வந்து, ஏலிக்கு அறிவித்தான். 15 ஏலி தொண்ணூற்றெட்டு வயதுள்ளவனாயிருந்தான்; அவன் பார்க்கக்கூடாதபடிக்கு, அவன் கண்கள் மங்கலாயிருந்தது. 16 அந்த மனுஷன் ஏலியைப் பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான்தான்; இன்று தான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான். அப்பொழுது அவன்: என் மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டான். 17 செய்தி கொண்டுவந்தவன் பிரதியுத்தரமாக: இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களுக்குள்ளே பெரிய சங்காரம் உண்டாயிற்று; உம்முடைய குமாரராகிய ஓப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்; தேவனுடைய பெட்டியும் பிடிபட்டுப்போயிற்று என்றான். 18 அவன் தேவனுடைய பெட்டியைக் குறித்துச் சொன்னவுடனே, ஏலி ஆசனத்திலிருந்து வாசலின் பக்கமாய் மல்லாக்க விழுந்தான்; அவன் கிழவனும் ஸ்தூலித்தவனுமாயிருந்தபடியால், அவன் பிடரி முறிந்து செத்துப்போனான். அவன் இஸ்ரவேலை நாற்பது வருஷம் நியாயம் விசாரித்தான். 19 பினெகாசின் மனைவியாகிய அவன் மருமகள் நிறைகர்ப்பிணியாயிருந்தாள்; அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும், தன் மாமனும் தன் புருஷனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது, அவள் கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிரசவித்தாள். 20 அவள் சாகப்போகிற நேரத்தில் அவளண்டையிலே நின்ற ஸ்திரீகள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை. 21 தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்துபோனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப்போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள். 22 தேவனுடைய பெட்டி பிடிபட்டுப் போனபடியினால், மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போயிற்று என்றாள்.

5

1 பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள். 2 பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனண்டையிலே வைத்தார்கள். 3 அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது; அப்பொழுது அவர்கள் தாகோனை எடுத்து, அதை அதின் ஸ்தானத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள். 4 அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது; தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாயிருந்தது. 5 ஆதலால் இந்நாள்வரைக்கும் தாகோனின் பூஜாசாரிகளும் தாகோனின் கோவிலுக்குள் பிரவேசிக்கிற யாவரும் அஸ்தோத்திலிருக்கிற தாகோனுடைய வாசற்படியை மிதிக்கிறதில்லை. 6 அஸ்தோத் ஊராரைப் பாழாக்கும்படிக்கு கர்த்தருடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் ஜனங்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார். 7 இப்படி நடந்ததை அஸ்தோத்தின் ஜனங்கள் கண்டபோது: இஸ்ரவேலின் தேவனுடைய கை நமதுமேலும், நம்முடைய தேவனாகிய தாகோனின்மேலும் கடினமாயிருக்கிறபடியால், அவருடைய பெட்டி நம்மிடத்தில் இருக்கலாகாது என்று சொல்லி; 8 பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் அழைப்பித்து, தங்களண்டையிலே கூடிவரச் செய்து: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை காத்பட்டணமட்டும் எடுத்துச் சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்றார்கள்; அப்படியே இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்துச் சுற்றிக்கொண்டுபோனார்கள். 9 அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்பு, கர்த்தருடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் மகா உக்கிரமாக இறங்கிற்று; அந்தப் பட்டணத்தின் மனுஷருக்குள், சிறியவர்துவக்கிப் பெரியவர்மட்டும், மூலவியாதியை உண்டாக்கி, அவர்களை வாதித்தார். 10 அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊரார்: எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள். 11 அவர்கள் பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் கூடிவரும்படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோடாதபடிக்கு, அவருடைய பெட்டியை அதின் ஸ்தானத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது. 12 செத்துப்போகாதிருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பிற்று.

6

1 கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது. 2 பின்பு பெலிஸ்தர் பூஜாசாரிகளையும் குறிசொல்லுகிறவர்களையும் அழைப்பித்து: கர்த்தருடைய பெட்டியைப்பற்றி நாங்கள் என்ன செய்யவேண்டும்? அதை நாங்கள் எவ்விதமாய் அதின் ஸ்தானத்திற்கு அனுப்பிவிடலாம் என்று எங்களுக்குச் சொல்லுங்கள் என்றார்கள். 3 அதற்கு அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நீங்கள் அனுப்பினால், அதை வெறுமையாய் அனுப்பாமல், குற்றநிவாரண காணிக்கையை எவ்விதத்திலும் அவருக்குச் செலுத்தவேண்டும்; அப்பொழுது நீங்கள் சொஸ்தமடைகிறதும் அல்லாமல், அவருடைய கை உங்களை விடாதிருந்த முகாந்தரம் இன்னது என்றும் உங்களுக்குத் தெரியவரும் என்றார்கள். 4 அதற்கு அவர்கள்: குற்றநிவாரண காணிக்கையாக நாங்கள் அவருக்கு என்னத்தைச் செலுத்தவேண்டுமென்று கேட்டதற்கு, அவர்கள்: உங்களெல்லாருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதையுண்டானபடியால், பெலிஸ்தருடைய அதிபதிகளின் இலக்கத்திற்குச் சரியாக மூலவியாதியின் சாயலானபடி செய்த ஐந்து பொன் சுரூபங்களும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும். 5 ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சுரூபங்களையும் நீங்கள் உண்டுபண்ணி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; அப்பொழுது ஒருவேளை உங்கள்மேலும், உங்கள் தேவர்கள்மேலும், உங்கள் தேசத்தின்மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களை விட்டு விலகும். 6 எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினதுபோல, நீங்கள் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துவானேன்? அவர்களை அவர் தீங்காய் வாதித்தபின்பு, ஜனங்களை அவர்கள் அனுப்பிவிட்டதும், அவர்கள் போய்விட்டதும் இல்லையோ? 7 இப்போதும் நீங்கள் ஒரு புதுவண்டில் செய்து, நுகம் பூட்டாதிருக்கிற இரண்டு கறவைப்பசுக்களைப் பிடித்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை அவைகளுக்குப் பின்னாகப் போகவிடாமல், வீட்டிலே கொண்டுவந்து விட்டு, 8 பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து, அதை வண்டிலின்மேல் வைத்து, நீங்கள் குற்றநிவாரணகாணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன்னுருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பிவிடுங்கள். 9 அப்பொழுது பாருங்கள்; அது தன் எல்லைக்குப் போகிறவழியாய்ப் பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள். 10 அந்த மனுஷர் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களைக் கொண்டுவந்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து, 11 கர்த்தருடைய பெட்டியையும், பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும், அந்த வண்டிலின்மேல் வைத்தார்கள். 12 அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியிலே செவ்வையாய்ப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கூப்பிட்டுக்கொண்டே நடந்தது; பெலிஸ்தரின் அதிபதிகள் பெத்ஷிமேசின் எல்லைமட்டும் அவைகளின் பிறகே போனார்கள். 13 பெத்ஷிமேசின் மனுஷர் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோஷப்பட்டார்கள். 14 அந்த வண்டில் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து, அங்கே நின்றது; அங்கே ஒரு பெரிய கல்லிருந்தது; அப்பொழுது வண்டிலின் மரங்களைப் பிளந்து, பசுக்களைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தினார்கள். 15 லேவியர் கர்த்தருடைய பெட்டியையும், அதனோடிருந்த பொன்னுருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனுஷர், அன்றையதினம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனங்களைச் செலுத்திப் பலிகளை இட்டார்கள். 16 பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும் இவைகளைக்கண்டு, அன்றையதினம் எக்ரோனுக்குத் திரும்பிப்போனார்கள். 17 பெலிஸ்தர் குற்றநிவாரணத்திற்காக, கர்த்தருக்குச் செலுத்தின மூலவியாதியின் சாயலான பொன் சுரூபங்களாவன, அஸ்தோத்திற்காக ஒன்று, காசாவுக்காக ஒன்று, அஸ்கலோனுக்காக ஒன்று, காத்துக்காக ஒன்று, எக்ரோனுக்காக ஒன்று. 18 பொன்னால் செய்த சுண்டெலிகளோவென்றால், அரணான பட்டணங்கள் துவக்கி நாட்டிலுள்ள கிராமங்கள்மட்டும், கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்மட்டும், ஐந்து அதிபதிகளுக்கும் ஆதீனமாயிருக்கிற பெலிஸ்தருடைய சகல ஊர்களின் இலக்கத்திற்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் இருக்கிறது. 19 ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக்கொண்டிருந்தார்கள். 20 இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்துக்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனுஷர் சொல்லி, 21 கீரியாத்யாரீமின் குடிகளுக்கு ஆட்களை அனுப்பி: பெலிஸ்தர் கர்த்தருடைய பெட்டியைத் திரும்ப அனுப்பினார்கள்; நீங்கள் வந்து, அதை உங்களிடத்துக்கு எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்.

7

1 அப்படியே கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின்மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டுவந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள். 2 பெட்டி கீரியாத்யாரீமிலே அநேகநாள் தங்கியிருந்தது; இருபது வருஷம் அங்கேயே இருந்தது; இஸ்ரவேல் குடும்பத்தாரெல்லாரும் கர்த்தரை நினைத்து, புலம்பிக்கொண்டிருந்தார்கள். 3 அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கி விடுவார் என்றான். 4 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, கர்த்தர் ஒருவருக்கே ஆராதனைசெய்தார்கள். 5 பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் கர்த்தரை மன்றாடும்படிக்கு, இஸ்ரவேலர் எல்லாரையும் மிஸ்பாவிலே கூட்டுங்கள் என்றான். 6 அவர்கள் அப்படியே மிஸ்பாவிலே கூடிவந்து தண்ணீர் மொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றி, அன்றையதினம் உபவாசம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்; மிஸ்பாவிலே சாமுவேல் இஸ்ரவேல் புத்திரரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான். 7 இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு, பெலிஸ்தரினிமித்தம் பயப்பட்டு, 8 சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள். 9 அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச்செய்தார். 10 சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்துகையில், பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண நெருங்கினார்கள்; கர்த்தர் மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்மேல் அந்நாளிலே முழங்கப்பண்ணி, அவர்களைக் கலங்கடித்ததினால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பட்டு விழுந்தார்கள். 11 அப்பொழுது இஸ்ரவேலர் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தரைப் பின்தொடர்ந்துபோய், பெத்காரீம் பள்ளத்தாக்குமட்டும் அவர்களை முறிய அடித்தார்கள். 12 அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான். 13 இந்தப்பிரகாரம் பெலிஸ்தர் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடிக்குத் தாழ்த்தப்பட்டார்கள்; சாமுவேலின் நாளெல்லாம் கர்த்தருடைய கை பெலிஸ்தருக்கு விரோதமாய் இருந்தது. 14 பெலிஸ்தர் இஸ்ரவேல் கையிலிருந்து பிடித்திருந்த எக்ரோன் துவக்கிக் காத்மட்டுமுள்ள பட்டணங்களும் இஸ்ரவேலுக்குத் திரும்பக் கிடைத்தது; அவைகளையும் அவைகளின் எல்லைகளையும் இஸ்ரவேலர் பெலிஸ்தர் கையிலே இராதபடிக்கு, விடுவித்துக் கொண்டார்கள்; இஸ்ரவேலுக்கும் எமோரியருக்கும் சமாதானம் உண்டாயிருந்தது. 15 சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். 16 அவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப்போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு, 17 அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது; அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

8

1 சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான். 2 அவனுடைய மூத்தகுமாரனுக்குப் பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாயிருந்தார்கள். 3 ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள். 4 அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து: 5 இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள். 6 எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். 7 அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள். 8 நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதல் இந்நாள்மட்டும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்துவந்த தங்கள் எல்லாச் செய்கைகளின்படியும் செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள். 9 இப்போதும் அவர்கள் சொல்லைக் கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார். 10 அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி: 11 உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால், தன் ரதத்திற்குமுன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரைவீரராகவும் வைத்துக்கொள்ளுவான். 12 ஆயிரம்பேருக்கும் ஐம்பதுபேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்தஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான். 13 உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான். 14 உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத்தோப்புகளிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான். 15 உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான். 16 உங்கள் வேலைக்காரரையும், உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான். 17 உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள். 18 நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான். 19 ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்: அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும். 20 சகல ஜாதிகளையும்போல நாங்களும் இருப்போம்; எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்தவேண்டும் என்றார்கள். 21 சாமுவேல் ஜனங்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அவைகளைக் கர்த்தரிடத்தில் தெரியப்படுத்தினான். 22 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து: அவரவர் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.

9

1 பென்யமீன் கோத்திரத்தாரில் கீஸ் என்னும் பேருள்ள மகா பராக்கிரமசாலியான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய அபியாவின் மகனான பெகோராத்திற்குப் பிறந்த சேரோரின் புத்திரனாகிய அபீயேலின் குமாரன். 2 அவனுக்குச் சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான்; இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை; எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான். 3 சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற்போயிற்று; ஆகையால் கீஸ் தன் குமாரனாகிய சவுலை நோக்கி: நீ வேலைக்காரரில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, கழுதைகளைத் தேட, புறப்பட்டுப்போ என்றான். 4 அப்படியே அவன் எப்பிராயீம் மலைகளையும் சலீஷா நாட்டையும் கடந்துபோனான்; அங்கே அவைகளைக் காணாமல் சாலீம் நாட்டைக்கடந்தார்கள். அங்கேயும் காணவில்லை; பென்யமீன் நாட்டை உருவக்கடந்தும் அவைகளைக் காணவில்லை. 5 அவர்கள் சூப் என்னும் நாட்டிற்கு வந்தபோது, சவுல் தன்னோடிருந்த வேலைக்காரனை நோக்கி: என் தகப்பன், கழுதைகளின்மேலுள்ள கவலையை விட்டு, நமக்காகக் கவலைப்படாதபடிக்குத் திரும்பிப்போவோம் வா என்றான். 6 அதற்கு அவன்: இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம்; ஒருவேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான். 7 அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனைப் பார்த்து: நாம் போனாலும் அந்த மனுஷனுக்கு என்னத்தைக் கொண்டுபோவோம்; நம்முடைய பைகளில் இருந்த தின்பண்டங்கள் செலவழிந்துபோயிற்று; தேவனுடைய மனுஷனாகிய அவருக்குக் கொண்டு போகத்தக்க காணிக்கை நம்மிடத்தில் ஒன்றும் இல்லையே என்றான். 8 அந்த வேலைக்காரன் பின்னும் சவுலைப் பார்த்து: இதோ, என் கையில் இன்னும் கால்சேக்கல் வெள்ளியிருக்கிறது; தேவனுடைய மனுஷன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும்படிக்கு, அதை அவருக்குக் கொடுப்பேன் என்றான். 9 முற்காலத்தில் இஸ்ரவேலில் யாதொருவர் தேவனிடத்தில் விசாரிக்கப்போனால், ஞானதிருஷ்டிக்காரனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிருஷ்டிக்காரன் என்னப்படுவான். 10 அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனை நோக்கி: நல்லகாரியம் சொன்னாய், போவோம் வா என்றான்; அப்படியே தேவனுடைய மனுஷன் இருந்த அந்தப் பட்டணத்திற்குப் போனார்கள். 11 அவர்கள் பட்டணத்து மேட்டின் வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள். 12 அதற்கு அவர்கள்: இருக்கிறார்; இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார்; தீவிரமாய்ப் போங்கள்; இன்றைக்கு ஜனங்கள் மேடையில் பலியிடுகிறபடியினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார். 13 நீங்கள் பட்டணத்திற்குள் பிரவேசித்தவுடனே, அவர் மேடையின்மேல் போஜனம் பண்ணப்போகிறதற்கு முன்னே அவரைக் காண்பீர்கள்; அவர் வருமட்டும் ஜனங்கள் போஜனம் பண்ணமாட்டார்கள்; பலியிட்டதை அவர் ஆசீர்வதிப்பார்; பின்பு அழைக்கப்பட்டவர்கள் போஜனம்பண்ணுவார்கள்; உடனே போங்கள்; இந்நேரத்திலே அவரைக் கண்டுகொள்ளலாம் என்றார்கள். 14 அவர்கள் பட்டணத்திற்குப் போய், பட்டணத்தின் நடுவே சேர்ந்தபோது, இதோ, சாமுவேல் மேடையின்மேல் ஏறிப்போகிறதற்காக, அவர்களுக்கு எதிரே புறப்பட்டுவந்தான். 15 சவுல் வர ஒருநாளுக்கு முன்னே கர்த்தர் சாமுவேலின் காதுகேட்க: 16 நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன் நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம்பண்ணக்கடவாய்; அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பான்; என் ஜனத்தின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியினால், நான் அவர்களைக் கடாட்சித்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார். 17 சாமுவேல் சவுலைக் கண்டபோது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே; இவன்தான் என் ஜனத்தை ஆளுவான் என்றார். 18 சவுல் நடுவாசலிலே சாமுவேலிடத்தில் வந்து: ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டான். 19 சாமுவேல் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: ஞானதிருஷ்டிக்காரன் நான்தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடே போஜனம்பண்ணவேண்டும்; நாளைக்காலமே நான் உன் இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன். 20 மூன்றுநாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் அகப்பட்டது; இதல்லாமல் சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா? என்றான். 21 அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான். 22 சாமுவேல் சவுலையும் அவன் வேலைக்காரனையும் போஜனசாலைக்குள் அழைத்துக்கொண்டுபோய், அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்திலே வைத்தான்; அழைக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய முப்பதுபேராயிருந்தார்கள். 23 பின்பு சாமுவேல் சமையற்காரனைப் பார்த்து: நான் உன் கையிலே ஒரு பங்கைக் கொடுத்துவைத்தேனே, அதைக் கொண்டுவந்து வை என்றான். 24 அப்பொழுது சமையற்காரன், ஒரு முன்னந்தொடையையும், அதனோடிருந்ததையும் எடுத்துக்கொண்டுவந்து, அதை சவுலுக்குமுன் வைத்தான்; அப்பொழுது சாமுவேல்: இதோ, இது உனக்கென்று வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு; நான் ஜனங்களை விருந்துக்கு அழைத்ததுமுதல், இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்; அப்படியே சவுல் அன்றையதினம் சாமுவேலோடே சாப்பிட்டான். 25 அவர்கள் மேடையிலிருந்து பட்டணத்திற்கு இறங்கிவந்தபின்பு, அவன் மேல்வீட்டிலே சவுலோடே பேசிக்கொண்டிருந்தான். 26 அவர்கள் அதிகாலமே கிழக்கு வெளுக்கிற நேரத்தில் எழுந்திருந்தபோது, சாமுவேல் சவுலை மேல்வீட்டின்மேல் அழைத்து: நான் உன்னை அனுப்பிவிடும்படிக்கு ஆயத்தப்படு என்றான்; சவுல் ஆயத்தப்பட்டபோது, அவனும் சாமுவேலும் இருவருமாக வெளியே புறப்பட்டார்கள். 27 அவர்கள் பட்டணத்தின் கடைசிமட்டும் இறங்கி வந்தபோது, சாமுவேல் சவுலைப் பார்த்து: வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்துபோகச் சொல் என்றான்; அப்படியே அவன் நடந்து போனான்; இப்பொழுது நான் தேவனுடைய வார்த்தையை உனக்குத் தெரிவிக்கும்படிக்கு, நீ சற்றே தரித்துநில் என்றான்.

10

1 அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம் பண்ணினார் அல்லவா? 2 நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன் எல்லையாகிய செல்சாகில் ராகேலின் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளின்மேலிருந்த கவலையை விட்டு, உங்களுக்காக விசாரப்பட்டு, என் மகனுக்காக என்னசெய்வேன்? என்கிறான் என்று சொல்லுவார்கள். 3 நீ அவ்விடத்தை விட்டு அப்புறம் கடந்துபோய், தாபோரிலுள்ள சமபூமியில் சேரும்போது, தேவனைப் பணியும்படி பெத்தேலுக்குப் போகிற மூன்று மனுஷர் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள்; ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் திராட்சரசமுள்ள ஒரு துருத்தியையும் கொண்டுவந்து, 4 உன்னுடைய சுகசெய்தியை விசாரித்து, உனக்கு இரண்டு அப்பங்களைக் கொடுப்பார்கள்; அவைகளை நீ அவர்கள் கையிலே வாங்கவேண்டும். 5 பின்பு பெலிஸ்தரின் தாணையம் இருக்கிற தேவனுடைய மலைக்குப் போவாய்; அங்கே நீ பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில், மேடையிலிருந்து இறங்கிவருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்திற்கு எதிர்ப்படுவாய்; அவர்களுக்கு முன்பாகத் தம்புரும் மேளமும் நாகசுரமும் சுரமண்டலமும் போகும்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். 6 அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடேகூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய். 7 இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய்; தேவன் உன்னோடே இருக்கிறார். 8 நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்ய வேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழுநாள் காத்திரு என்றான். 9 அவன் சாமுவேலை விட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார்; அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நேரிட்டது. 10 அவர்கள் அந்த மலைக்கு வந்தபோது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான். 11 அதற்கு முன்னே அவனை அறிந்தவர்கள் எல்லாரும் அவன் தீர்க்கதரிசிகளோடிருந்து, தீர்க்கதரிசனம் சொல்லுகிறதைக் கண்டபோது: கீசின் குமாரனுக்கு வந்தது என்ன? சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்று அந்த ஜனங்கள் ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 12 அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியாயிற்று. 13 அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின்மேல் வந்தான். 14 அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: நீங்கள் எங்கே போனீர்கள் என்று அவனையும் அவன் வேலைக்காரனையும் கேட்டான். அதற்கு அவன்: நாங்கள் கழுதைகளைத் தேடப்போய், அவைகளை எங்குங் காணாதபடியினால், சாமுவேலிடத்துக்குப் போனோம் என்றான். 15 அப்பொழுது சவுலின் சிறியதகப்பன்: சாமுவேல் உங்களுக்குச் சொன்னது என்ன? அதைச் சொல் என்றான். 16 சவுல் தன் சிறியதகப்பனைப் பார்த்து: கழுதைகள் அகப்பட்டது என்று எங்களுக்குத் தீர்மானமாய்ச் சொன்னார் என்றான்; ஆனாலும் ராஜ்யபாரத்தைப்பற்றிச் சாமுவேல் சொன்னதை அவனுக்கு அறிவிக்கவில்லை. 17 சாமுவேல் ஜனங்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்தில் வரவழைத்து, 18 இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்களை எகிப்தியர் கைக்கும், உங்களை இறுகப்பிடித்த எல்லா ராஜ்யத்தாரின் கைக்கும் நீங்கலாக்கிவிட்டேன். 19 நீங்களோ உங்களுடைய எல்லாத் தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும், ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும், வந்து நில்லுங்கள் என்றான். 20 சாமுவேல் இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சேரப்பண்ணினபின்பு பென்யமீன் கோத்திரத்தின்மேல் சீட்டு விழுந்தது. 21 அவன் பென்யமீன் கோத்திரத்தை அதினுடைய குடும்பங்களின்படியே சேரப்பண்ணினபின்பு, மாத்திரி குடும்பத்தின்மேலும், அதிலே கீசின் குமாரனாகிய சவுலின்மேலும், சீட்டு விழுந்தது; அவனைத் தேடினபோது, அவன் அகப்படவில்லை. 22 அவன் இனி இங்கே வருவானா என்று அவர்கள் திரும்பக் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது: இதோ, அவன் தளவாடங்களிருக்கிற இடத்திலே ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்று கர்த்தர் சொன்னார். 23 அப்பொழுது அவர்கள் ஓடி, அங்கேயிருந்து அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்; அவன் ஜனங்கள் நடுவே வந்து நின்றபோது, எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான். 24 அப்பொழுது சாமுவேல் எல்லா ஜனங்களையும் நோக்கி: கர்த்தர் தெரிந்துகொண்டவனைப் பாருங்கள், சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்குச் சமானமானவன் இல்லை என்றான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள். 25 சாமுவேல் ராஜாங்கத்தின் முறையை ஜனங்களுக்குத் தெரிவித்து, அதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, ஜனங்களையெல்லாம் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டான். 26 சவுலும் கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; இராணுவத்தில் தேவன் எவர்கள் மனதை ஏவினாரோ, அவர்களும் அவனோடேகூடப் போனார்கள். 27 ஆனாலும் பேலியாளின் மக்கள்: இவனா நம்மை ரட்சிக்கப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கை கொண்டுவராமல் அவனை அசட்டைபண்ணினார்கள்; அவனோ காதுகேளாதவன்போல இருந்தான்.

11

1 அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிக்கைபோட்டான்; அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள். 2 அதற்கு அம்மோனியனாகிய நாகாஸ்: நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல் எல்லாவற்றின்மேலும் நிந்தைவரப்பண்ணுவதே நான் உங்களோடே பண்ணும் உடன்படிக்கை என்றான். 3 அதற்கு யாபேசின் மூப்பர்கள்: நாங்கள் இஸ்ரவேல் நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பும்படி, ஏழுநாள் எங்களுக்குத் தவணைகொடும், எங்களை ரட்சிப்பார் இல்லாவிட்டால், அப்பொழுது உம்மிடத்தில் வருவோம் என்றார்கள். 4 அந்த ஸ்தானாபதிகள் சவுலின் ஊராகிய கிபியாவிலே வந்து, ஜனங்களின் காதுகேட்க அந்தச் செய்திகளைச் சொன்னார்கள்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள். 5 இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, ஜனங்கள் அழுகிற முகாந்தரம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள். 6 சவுல் இந்தச் செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால் அவன் மிகவும் கோபம் மூண்டவனாகி, 7 ஓரிணைமாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுலின் பின்னாலேயும், சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள். 8 அவர்களைப் பேசேக்கிலே இலக்கம்பார்த்தான்; இஸ்ரவேல் புத்திரரில் மூன்றுலட்சம்பேரும், யூதா மனுஷரில் முப்பதினாயிரம்பேரும் இருந்தார்கள். 9 வந்த ஸ்தானாபதிகளை அவர்கள் நோக்கி: நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு ரட்சிப்புக் கிடைக்கும் என்று கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனுஷருக்குச் சொல்லுங்கள் என்றார்கள்; ஸ்தானாபதிகள் வந்து யாபேசின் மனுஷரிடத்தில் அதை அறிவித்தார்கள்; அதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். 10 பின்பு யாபேசின் மனுஷர்: நாளைக்கு உங்களிடத்தில் வருவோம், அப்பொழுது உங்கள் இஷ்டப்படியெல்லாம் எங்களுக்குச் செய்யுங்கள் என்றார்கள். 11 மறுநாளிலே சவுல் ஜனங்களை மூன்று படையாக வகுத்து, கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் பாளயத்திற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியரை முறிய அடித்தான்; தப்பினவர்களில் இரண்டுபேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறிப்போனார்கள். 12 அப்பொழுது ஜனங்கள் சாமுவேலை நோக்கி: சவுலா நமக்கு ராஜாவாயிருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனுஷரை நாங்கள் கொன்றுபோடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள். 13 அதற்குச் சவுல்: இன்றையதினம் ஒருவரும் கொல்லப்படலாகாது; இன்று கர்த்தர் இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார் என்றான். 14 அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்துவோம் வாருங்கள் என்றான். 15 அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷங்கொண்டாடினார்கள்.

12

1 அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி: இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொற்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன். 2 இப்போதும் இதோ, ராஜாவானவர் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவருகிறார்; நானோ கிழவனும் நரைத்தவனுமானேன்; என் குமாரர் உங்களோடிருப்பார்கள்; நான் என் சிறுவயதுமுதல் இந்நாள்வரைக்கும் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவந்தேன். 3 இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண்செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான். 4 அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநியாயஞ் செய்யவும் இல்லை; எங்களுக்கு இடுக்கண் செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள். 5 அதற்கு அவன்: நீங்கள் என் கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் கர்த்தர் உங்களுக்கு எதிராகச் சாட்சியாயிருக்கிறார்; அவர் அபிஷேகம்பண்ணினவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சிதான் என்றார்கள். 6 அப்புறம் சாமுவேல் ஜனங்களை நோக்கி: மோசேயையும் ஆரோனையும் ஏற்படுத்தினவரும், உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் கர்த்தரே. 7 இப்போதும் கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான கிரியைகளைக்குறித்தும், நான் கர்த்தருடைய சந்நிதியில் உங்களோடே நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள். 8 யாக்கோபு எகிப்திலே போயிருக்கும்போது, உங்கள் பிதாக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள், அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் அனுப்பினார்; அவர்கள் உங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்து, அவர்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணினார்கள். 9 அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்துபோகிறபோது, அவர் அவர்களை ஆத்சோரின் சேனாபதியாகிய சிசெராவின் கையிலும், பெலிஸ்தரின் கையிலும், மோவாபிய ராஜாவின் கையிலும் விற்றுப்போட்டார்; இவர்கள் அவர்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினார்கள். 10 ஆகையால் அவர்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டு: நாங்கள் கர்த்தரை விட்டுப் பாகால்களையும் அஸ்தரோத்தையும் சேவித்ததினாலே, பாவஞ்செய்தோம்; இப்போதும் எங்கள் சத்துருக்களின் கைக்கு எங்களை நீங்கலாக்கி ரட்சியும்; இனி உம்மைச் சேவிப்போம் என்றார்கள். 11 அப்பொழுது கர்த்தர் எருபாகாலையும் பேதானையும் யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பி, நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிக்குச் சுற்றிலும் இருந்த உங்கள் சத்துருக்களின் கைக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்தார். 12 அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாய் வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள். 13 இப்போதும் நீங்கள் வேண்டும் என்று விரும்பித் தெரிந்துகொண்ட ராஜா, இதோ, இருக்கிறார்; இதோ, கர்த்தர் உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினார். 14 நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள். 15 நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்களானால், கர்த்தருடைய கை உங்கள் பிதாக்களுக்கு விரோதமாயிருந்தது போல உங்களுக்கும் விரோதமாயிருக்கும். 16 இப்பொழுது கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள். 17 இன்று கோதுமை அறுப்பின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதினால், கர்த்தரின் பார்வைக்குச் செய்த உங்களுடைய பொல்லாப்புப் பெரியதென்று நீங்கள் கண்டு உணரும்படிக்கு, நான் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுவேன்; அப்பொழுது இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி, 18 சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அன்றையதினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்து; 19 சாமுவேலைப் பார்த்து: நாங்கள் சாகாதபடிக்கு உம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் உம்முடைய அடியாருக்காக விண்ணப்பம் செய்யும்; நாங்கள் செய்த எல்லாப் பாவங்களோடும் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்ட இந்தப் பாவத்தையும் கூட்டிக்கொண்டோம் என்று ஜனங்கள் எல்லாரும் சொன்னார்கள். 20 அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள். 21 விலகிப்போகாதிருங்கள்; மற்றப்படி பிரயோஜனமற்றதும் ரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற வீணானவைகளைப் பின்பற்றுவீர்கள்; அவைகள் வீணானவைகளே. 22 கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார். 23 நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன். 24 நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். 25 நீங்கள் இன்னும் பொல்லாப்பைச் செய்யவே செய்வீர்களானால், நீங்களும் உங்கள் ராஜாவும் நாசமடைவீர்கள் என்றான்.

13

1 சவுல் ராஜ்யபாரம்பண்ணி, ஒரு வருஷமாயிற்று; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருஷம் அரசாண்டபோது, 2 இஸ்ரவேலில் மூவாயிரம்பேரைத் தனக்குத் தெரிந்துகொண்டான்; அவர்களில் இரண்டாயிரம்பேர் சவுலோடேகூட மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும், ஆயிரம்பேர் யோனத்தானோடேகூடப் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலும் இருந்தார்கள்; மற்ற ஜனங்களை அவரவர் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டான். 3 யோனத்தான் கேபாவிலே தாணையம் இருந்த பெலிஸ்தரை முறிய அடித்தான்; பெலிஸ்தர் அதைக் கேள்விப்பட்டார்கள்; ஆகையினால் இதை எபிரெயர் கேட்கக்கடவர்கள் என்று சவுல் தேசமெங்கும் எக்காளம் ஊதுவித்தான். 4 தாணையம் இருந்த பெலிஸ்தரைச் சவுல் முறிய அடித்தான் என்றும், இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலெல்லாம் கேள்விப்பட்டபோது, ஜனங்கள் சவுலுக்குப் பின்செல்லும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள். 5 பெலிஸ்தர் இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள். 6 அப்பொழுது இஸ்ரவேலர் தங்களுக்கு உண்டான இக்கட்டைக் கண்டபோது, ஜனங்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும், துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள். 7 எபிரெயரில் சிலர் யோர்தானையும் கடந்து, காத் நாட்டிற்கும் கீலேயாத் தேசத்திற்கும் போனார்கள்; சவுலோ இன்னும் கில்காலில் இருந்தான்; சகல ஜனங்களும் பயந்துகொண்டு அவனுக்குப் பின்சென்றார்கள். 8 அவன் தனக்குச் சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, ஜனங்கள் அவனை விட்டுச் சிதறிப்போனார்கள். 9 அப்பொழுது சவுல்: சர்வாங்க தகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினான். 10 அவன் சர்வாங்க தகனபலியிட்டு முடிகிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வந்தனஞ்செய்ய அவனுக்கு எதிர்கொண்டுபோனான். 11 நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு, சவுல்: ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர் வராததையும், பெலிஸ்தர் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் கண்டபடியினாலே, 12 கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான். 13 சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். 14 இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான். 15 சாமுவேல் எழுந்திருந்து, கில்காலை விட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள். 16 சவுலும் அவன் குமாரனாகிய யோனத்தானும் அவர்களோடேகூட இருக்கிற ஜனங்களும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்துவிட்டார்கள்; பெலிஸ்தரோ மிக்மாசிலே பாளயமிறங்கியிருந்தார்கள். 17 கொள்ளைக்காரர் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து மூன்று படையாய்ப் புறப்பட்டுவந்தார்கள்; ஒரு படை ஒப்ராவழியாய்ச் சூவால் நாட்டிற்கு நேராகப் போயிற்று. 18 வேறொரு படை பெத்தொரோன் வழியாய்ப் போயிற்று; வேறொருபடை வனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாய்ப் போயிற்று. 19 எபிரெயர் பட்டயங்களையாகிலும் ஈட்டிகளையாகிலும் உண்டுபண்ணாதபடிக்குப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று பெலிஸ்தர் சொல்லியிருந்தபடியால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லன் அகப்படவில்லை. 20 இஸ்ரவேலர் யாவரும் அவரவர் தங்கள் கொழுவிரும்புகளையும், தங்கள் மண்வெட்டிகளையும், தங்கள் கோடரிகளையும், தங்கள் கடப்பாரைகளையும் தீட்டிக் கூர்மையாக்குகிறதற்கு, பெலிஸ்தரிடத்துக்குப் போகவேண்டியதாயிருந்தது. 21 கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், முக்கூருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும், தாற்றுக்கோல்களையும் கூர்மையாக்குகிறதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது. 22 யுத்தநாள் வந்தபோது, சவுலுக்கும் அவன் குமாரனாகிய யோனத்தானுக்குமேயன்றி, சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற ஜனங்களில் ஒருவர் கையிலும் பட்டயமும் ஈட்டியும் இல்லாதிருந்தது. 23 பெலிஸ்தரின் பாளயம் மிக்மாசிலிருந்து போகிற வழிமட்டும் பரம்பியிருந்தது.

14

1 ஒருநாள் சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போவோம் வா என்று சொன்னான்; அதை அவன் தன் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை. 2 சவுல் கிபியாவின் கடைசிமுனையாகிய மிக்ரோனிலே ஒரு மாதளமரத்தின்கீழ் இருந்தான்; அவனோடேகூட இருந்த ஜனங்கள் ஏறக்குறைய அறுநூறுபேராயிருந்தார்கள். 3 சீலோவிலே கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் குமாரனாகிய பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும் அகிதூபின் குமாரனுமாகிய அகியா என்பவன் ஏபோத்தைத் தரித்தவனாயிருந்தான்; யோனத்தான் போனதை ஜனங்கள் அறியாதிருந்தார்கள். 4 யோனத்தான் பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போகப்பார்த்த வழிகளின் நடுவே, இந்தப்பக்கம் ஒரு செங்குத்தான பாறையும், அந்தப்பக்கம் ஒரு செங்குத்தான பாறையும் இருந்தது; ஒன்றுக்குப் போசேஸ் என்று பேர், மற்றொன்றுக்குச் சேனே என்று பேர். 5 அந்தப் பாறைகளில் ஒன்று வடக்கே மிக்மாசுக்கு எதிராகவும், மற்றொன்று தெற்கே கிபியாவுக்கு எதிராகவும் இருந்தது. 6 யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்திற்குப் போவோம் வா; ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான். 7 அப்பொழுது அவன் ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போம்; இதோ, உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான். 8 அதற்கு யோனத்தான்: இதோ, நாம் கடந்து, அந்த மனுஷரிடத்திற்குப் போகிறவர்கள்போல அவர்களுக்கு நம்மைக் காண்பிப்போம். 9 நாங்கள் உங்களிடத்துக்கு வருமட்டும் நில்லுங்கள் என்று நம்மோடே சொல்வார்களானால், நாம் அவர்களிடத்துக்கு ஏறிப்போகாமல், நம்முடைய நிலையிலே நிற்போம். 10 எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள் என்று சொல்வார்களானால், ஏறிப்போவோம்; கர்த்தர் அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இது நமக்கு அடையாளம் என்றான். 11 அப்படியே அவர்கள் இருவரும் பெலிஸ்தரின் தாணையத்திற்முன் தங்களைக் காண்பித்தார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்: இதோ, எபிரெயர் ஒளித்துக்கொண்டிருந்த வளைகளைவிட்டுப் புறப்படுகிறார்கள் என்று சொல்லி, 12 தாணையம் இருக்கிற மனுஷர் யோனத்தானையும் அவன் ஆயுததாரியையும் பார்த்து: எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்; அப்பொழுது யோனத்தான் தன் ஆயுததாரியை நோக்கி: என் பின்னாலே ஏறிவா; கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, 13 யோனத்தான் தன் கைகளாலும் தன் கால்களாலும் தவழ்ந்து ஏறினான்; அவன் ஆயுததாரி அவன் பின்னாலே ஏறினான்; அப்பொழுது அவர்கள் யோனத்தானுக்கு முன்பாக மடிந்து விழுந்தார்கள்; அவன் ஆயுததாரியும் அவன் பின்னாலே வெட்டிக்கொண்டே போனான். 14 யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அடித்த அந்த முந்தின அடியிலே ஏறக்குறைய இருபதுபேர் அரையேர் நிலமான விசாலத்திலே விழுந்தார்கள். 15 அப்பொழுது பாளயத்திலும் வெளியிலும், சகல ஜனங்களிலும், பயங்கரம் உண்டாகி, தாணையம் இருந்தவர்களும் கொள்ளையிடப்போன தண்டிலுள்ளவர்களுங்கூடத் திகில் அடைந்தார்கள்; பூமியும் அதிர்ந்தது; அது தேவனால் உண்டான பயங்கரமாயிருந்தது. 16 பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே சவுலுக்கு இருந்த ஜாமக்காரர் பார்த்து: இதோ, அந்த ஏராளமான கூட்டம் கலைந்து, ஒருவர்மேல் ஒருவர் விழுகிறதைக் கண்டார்கள். 17 அப்பொழுது சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனங்களை நோக்கி: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று இலக்கம்பாருங்கள் என்றான்; அவர்கள் இலக்கம் பார்க்கிறபோது, இதோ, யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள். 18 அப்பொழுது சவுல் அகீயாவை நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்; தேவனுடைய பெட்டி அந்நாட்களில் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் இருந்தது. 19 இப்படிச் சவுல் ஆசாரியனோடே பேசுகையில், பெலிஸ்தரின் பாளயத்தில் உண்டான கலகம் வரவர அதிகரித்தது; அப்பொழுது சவுல் ஆசாரியனைப் பார்த்து: இருக்கட்டும் என்றான். 20 சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாயிருந்தபடியால் மகா அமளியுண்டாயிற்று. 21 இதற்குமுன் பெலிஸ்தருடன் கூடி அவர்களோடேகூடப் பாளயத்திலே திரிந்து வந்த எபிரெயரும், சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற இஸ்ரவேலரோடே கூடிக்கொண்டார்கள். 22 எப்பிராயீம் மலைகளில் ஒளித்துக்கொண்டிருந்த சகல இஸ்ரவேலரும் பெலிஸ்தர் முறிந்தோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள். 23 இப்படிக் கர்த்தர் அன்றையதினம் இஸ்ரவேலை ரட்சித்தார்; அந்த யுத்தம் பெத்தாவேன்மட்டும் நடந்தது. 24 இஸ்ரவேலர் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்: நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்கவேண்டும், சாயங்காலமட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ, அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் ஜனங்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், ஜனங்களில் ஒருவரும் எவ்வளவேனும் போஜனம்பண்ணாதிருந்தார்கள். 25 தேசத்து ஜனங்கள் எல்லாரும் ஒரு காட்டிலே வந்தார்கள்; அங்கே வெளியிலே தேன்கூடு கட்டியிருந்தது. 26 ஜனங்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள். 27 யோனத்தான் தன் தகப்பன் ஜனங்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டுக்கொண்டான்; அதினால் அவன் கண்கள் தெளிந்தது. 28 அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்கு போஜனம் சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் ஜனங்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகையினால் ஜனங்கள் விடாய்த்திருக்கிறார்கள் என்றான். 29 அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் ஜனங்களைக் கலக்கப்படுத்தினார்; நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததினாலே, என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள். 30 இன்றையதினம் ஜனங்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் சத்துருக்களின் கொள்ளையிலே ஏதாகிலும் புசித்திருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான சங்காரம் மிகவும் அதிகமாயிருக்குமே என்றான். 31 அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன்மட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தபோது, ஜனங்கள் மிகவும் விடாய்த்திருந்தார்கள். 32 அப்பொழுது ஜனங்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் புசித்தார்கள். 33 அப்பொழுது: இதோ, இரத்தத்தோடிருக்கிறதைப் புசிக்கிறதினால் ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவித்தார்கள்; அவன்: நீங்கள் துரோகம்பண்ணினீர்கள்; இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடத்தில் உருட்டிக்கொண்டுவாருங்கள். 34 நீங்கள் ஜனத்திற்குள்ளே போய், இரத்தத்தோடிருக்கிறதைச் சாப்பிடுகிறதினாலே, கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்யாதபடிக்கு, அவரவர் தங்கள் மாட்டையும் அவரவர் தங்கள் ஆட்டையும் என்னிடத்தில் கொண்டுவந்து, இங்கே அடித்து, பின்பு சாப்பிடவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; ஆகையால் ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் மாடுகளை அன்று இராத்திரி தாங்களே கொண்டுவந்து, அங்கே அடித்தார்கள். 35 பின்பு சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம். 36 அதற்குப்பின்பு சவுல்: நாம் இந்த இராத்திரியிலே பெலிஸ்தரைத் தொடர்ந்துபோய், விடியற்கால வெளிச்சமாகுமட்டும் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவசந்நிதியில் சேரக்கடவோம் என்றான். 37 அப்படியே: பெலிஸ்தரைத் தொடர்ந்துபோகலாமா? அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரா? என்று சவுல் தேவனிடத்தில் விசாரித்தான்; அவர் அந்த நாளிலே அவனுக்கு மறுஉத்தரவு அருளவில்லை. 38 அப்பொழுது சவுல்: ஜனத்தின் தலைவர்களே, நீங்கள் எல்லாரும் இங்கே சேர்ந்துவந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள். 39 அது என் குமாரனாகிய யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் சாகவே சாகவேண்டும் என்று இஸ்ரவேலை ரட்சிக்கிற கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பிரதியுத்தரம் சொல்லவில்லை. 40 அதற்குப்பின் அவன் இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: நீங்கள் அந்தப்பக்கத்திலே இருங்கள்; நானும் என் குமாரனாகிய யோனத்தானும் இந்தப்பக்கத்தில் இருப்போம் என்றான்; ஜனங்கள் சவுலைப் பார்த்து: உம்முடைய கண்களுக்கு நலமானபடி செய்யும் என்றார்கள். 41 அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு யதார்த்தத்தை விளங்கப்பண்ணும் என்றான்; அப்பொழுது யோனத்தான்மேலும் சவுலின்மேலும் சீட்டு விழுந்தது, ஜனங்களோ தப்பினார்கள். 42 எனக்கும் என் குமாரனாகிய யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது. 43 அப்பொழுது சவுல் யோனத்தானைப் பார்த்து: நீ செய்தது என்ன? எனக்குச் சொல் என்று கேட்டான். அதற்கு யோனத்தான்: என் கையில் இருக்கிற கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தேன்; அதற்காக நான் சாகவேண்டும் என்றான். 44 அப்பொழுது சவுல்: யோனத்தானே, நீ சாகத்தான்வேண்டும்; இல்லாவிட்டால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்றான். 45 ஜனங்களோ சவுலை நோக்கி: இஸ்ரவேலிலே இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலைசெய்யப்படலாமா? அது கூடாது; அவன் தலையில் இருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள்; அப்படியே யோனத்தான் சாகாதபடிக்கு, ஜனங்கள் அவனைத் தப்புவித்தார்கள். 46 சவுல் பெலிஸ்தரைத் தொடராமல் திரும்பிவிட்டான்; பெலிஸ்தரும் தங்கள் ஸ்தலத்திற்குப் போய்விட்டார்கள். 47 இப்படிச் சவுல் இஸ்ரவேலை ஆளுகிற ராஜ்யபாரத்தைப் பெற்றுக்கொண்டு, சுற்றிலும் இருக்கிற தன்னுடைய எல்லாச் சத்துருக்களுமாகிய மோவாபியருக்கும், அம்மோன் புத்திரருக்கும், ஏதோமியருக்கும், சோபாவின் ராஜாக்களுக்கும், பெலிஸ்தருக்கும் விரோதமாக யுத்தம்பண்ணி, எவர்கள்மேல் படையெடுத்தானோ, அவர்களையெல்லாம் அடக்கினான். 48 அவன் பலத்து, அமலேக்கியரை முறிய அடித்து, இஸ்ரவேலரைக் கொள்ளையிடுகிற யாவர் கைக்கும் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தான். 49 சவுலுக்கு இருந்த குமாரர்: யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்பவர்கள்; அவனுடைய இரண்டு குமாரத்திகளில், மூத்தவள் பேர் மேரப், இளையவள் பேர் மீகாள். 50 சவுலுடைய மனைவியின் பேர் அகினோவாம், அவள் அகிமாசின் குமாரத்தி; அவனுடைய சேனாபதியின் பேர் அப்னேர், அவன் சவுலுடைய சிறியதகப்பனாகிய நேரின் குமாரன். 51 கீஸ் சவுலின் தகப்பன்; அப்னேரின் தகப்பனாகிய நேர் ஆபியேலின் குமாரன். 52 சவுல் இருந்த நாளெல்லாம் பெலிஸ்தரின்மேல் கடினமான யுத்தம் நடந்தது; சவுல் ஒரு பராக்கிரமசாலியையாகிலும் ஒரு பலசாலியையாகிலும் காணும்போது, அவர்கள் எல்லாரையும் தன்னிடமாகச் சேர்த்துக்கொள்ளுவான்.

15

1 பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்: 2 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். 3 இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான். 4 அப்பொழுது சவுல்: இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகைபார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள். 5 சவுல் அமலேக்குடைய பட்டணமட்டும் வந்து, பள்ளத்தாக்கிலே ஒரு பதிவிடையை வைத்தான். 6 சவுல் கேனியரை நோக்கி: நான் அமலேக்கியரோடேகூட உங்களையும் வாரிக்கொள்ளாதபடிக்கு, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லாருக்கும் தயவுசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர் அமலேக்கியரின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள். 7 அப்பொழுது சவுல்: ஆவிலா துவக்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப் போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து, 8 அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம்பண்ணினான். 9 சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள். 10 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: 11 நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். 12 மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது. 13 சாமுவேல் சவுலினிடத்தில் போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான். 14 அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான். 15 அதற்குச் சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டுவந்தார்கள்; ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான். 16 அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், கர்த்தர் இந்த இராத்திரியிலே எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான். 17 அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே. 18 இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம்பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார். 19 இப்படியிருக்க, நீர் கர்த்தருடைய சொல்லைக்கேளாமல், கொள்ளையின்மேல் பறந்து, கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தது என்ன என்றான். 20 சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன். 21 ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான். 22 அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். 23 இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான். 24 அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன். 25 இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான். 26 சாமுவேல் சவுலைப் பார்த்து: நான் உம்மோடேகூடத் திரும்பிவருவதில்லை; கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, கர்த்தர் உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான். 27 போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவன் சால்வையின் தொங்கலைப் பிடித்துக்கொண்டான், அது கிழிந்துபோயிற்று. 28 அப்பொழுது சாமுவேல் அவனை நோக்கி: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு; உம்மைப்பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார். 29 இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம்மாற அவர் மனுஷன் அல்ல என்றான். 30 அதற்கு அவன்: நான் பாவஞ்செய்தேன்; இப்போது என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனம்பண்ணி, நான் உம்முடைய தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான். 31 அப்பொழுது சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப் பின்சென்றான்; சவுல் கர்த்தரைப் பணிந்துகொண்டான். 32 பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம் என்றான். 33 சாமுவேல்: உன் பட்டயம் ஸ்திரீகளைப் பிள்ளையற்றவர்களாக்கினதுபோல, ஸ்திரீகளுக்குள்ளே உன் தாயும் பிள்ளையற்றவளாவாள் என்று சொல்லி; சாமுவேல் கில்காலிலே கர்த்தருக்கு முன்பாக ஆகாகைத் துண்டித்துப்போட்டான். 34 பின்பு சாமுவேல் ராமாவுக்குப் போனான்; சவுலோ தன் ஊராகிய கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய்விட்டான். 35 சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை; இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.

16

1 கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார். 2 அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப் போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது கர்த்தர்: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி, 3 ஈசாயைப் பலிவிருந்துக்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார். 4 கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அவ்வூரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டுவந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள். 5 அதற்கு அவன்: சமாதானந்தான்; கர்த்தருக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டு, என்னுடனேகூடப் பலிவிருந்துக்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவன் குமாரரையும் பரிசுத்தம்பண்ணி, அவர்களைப் பலிவிருந்துக்கு அழைத்தான். 6 அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுபவன் இவன்தானாக்கும் என்றான். 7 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். 8 அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான். 9 ஈசாய் சம்மாவையும் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான். 10 இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழுபேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்து போகப்பண்ணினான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி; 11 உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான். 12 ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான்; அவன் சிவந்தமேனியும், அழகிய கண்களும், நல்ல ரூபமுமுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது கர்த்தர்: இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார். 13 அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான். 14 கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது. 15 அப்பொழுது சவுலின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி உம்மைக் கலங்கப்பண்ணுகிறதே. 16 சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள். 17 சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நன்றாய் வாசிக்கத்தக்க ஒருவனைத் தேடி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். 18 அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான். 19 அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டுமந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச்சொன்னான். 20 அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின்மேல் ஏற்றி, தன் குமாரனாகிய தாவீதின் வசமாய் சவுலுக்கு அனுப்பினான். 21 அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் சிநேகித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான். 22 சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி, தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என் கண்களில் அவனுக்குத் தயவுகிடைத்தது என்று சொல்லச்சொன்னான். 23 அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து, சொஸ்தமாவான்.

17

1 பெலிஸ்தர் யுத்தம்பண்ணுகிறதற்குத் தங்கள் சேனைகளைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒருமித்துக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே பாளயமிறங்கினார்கள். 2 சவுலும் இஸ்ரவேல் மனுஷரும் ஒருமித்துக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கி, பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள். 3 பெலிஸ்தர் அந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும், இஸ்ரவேலர் இந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும் நின்றார்கள்; அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது. 4 அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டுவந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறுமுழமும் ஒரு ஜாணுமாம். 5 அவன் தன் தலையின்மேல் வெண்கலச் சீராவைப் போட்டு, ஒரு போர்க்கவசம் தரித்துக்கொண்டிருப்பான்; அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சேக்கலான வெண்கலமாயிருக்கும். 6 அவன் தன் கால்களிலே வெண்கலக் கவசத்தையும் தன் தோள்களின்மேல் வெண்கலக் கேடகத்தையும் தரித்திருப்பான். 7 அவனுடைய ஈட்டித்தாங்கு நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியும் அவன் ஈட்டியின் அலகு அறுநூறுசேக்கல் இரும்புமாயிருக்கும்; பரிசைபிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான். 8 அவன் வந்துநின்று, இஸ்ரவேல் சேனைகளைப் பார்த்துச் சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்திற்கு அணிவகுத்து நிற்கிறது என்ன? நான் பெலிஸ்தன் அல்லவா? நீங்கள் சவுலின் சேவகர் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவன் என்னிடத்தில் வரட்டும். 9 அவன் என்னோடு யுத்தம்பண்ணவும் என்னைக் கொல்லவும் சமர்த்தனானால், நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராயிருப்போம்; நான் அவனை ஜெயித்து அவனைக் கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரராயிருந்து, எங்களைச் சேவிக்கவேண்டும் என்று சொல்லி, 10 பின்னும் அந்தப் பெலிஸ்தன்: நான் இன்றையதினம் இஸ்ரவேலுடைய சேனைகளை நிந்தித்தேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்பண்ண ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டுவருவான். 11 சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள். 12 தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஈசாய் என்னும் பேருள்ள எப்பிராத்திய மனுஷனுடைய குமாரனாயிருந்தான்; ஈசாயுக்கு எட்டுக் குமாரர் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற ஜனங்களுக்குள்ளே வயதுசென்ற கிழவனாய் மதிக்கப்பட்டான். 13 ஈசாயினுடைய மூன்று மூத்த குமாரர் சவுலோடேகூட யுத்தத்திற்குப் போயிருந்தார்கள்; யுத்தத்திற்குப் போயிருந்த அவனுடைய மூன்று குமாரரில் மூத்தவனுக்கு எலியாப் என்றும், இரண்டாங்குமாரனுக்கு அபினதாப் என்றும், மூன்றாங்குமாரனுக்குச் சம்மா என்றும் பேர். 14 தாவீது எல்லாருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்றுபேரும் சவுலோடேகூடப் போயிருந்தார்கள். 15 தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப் போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான். 16 அந்தப் பெலிஸ்தன் காலையிலும் மாலையிலும் நாற்பதுநாள் வந்துவந்து நிற்பான். 17 ஈசாய் தன் குமாரனாகிய தாவீதை நோக்கி: உன் சகோதரருக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, பாளயத்திலிருக்கிற உன் சகோதரரிடத்தில் ஓட்டமாய்ப் போய், 18 இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக் கொண்டுவா என்றான். 19 அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரவேலர் எல்லாரும், ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். 20 தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; சேனைகள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள். 21 இஸ்ரவேலரும் பெலிஸ்தரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்துக்கொண்டிருந்தார்கள். 22 அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, ரஸ்துக்களைக் காக்கிறவன் வசமாக வைத்துவிட்டு, சேனைக்குள் ஓடி, தன் சகோதரரைப் பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான். 23 அவன் இவர்களோடே பேசிக்கொண்டிருக்கையில், இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்த வீரன் பெலிஸ்தரின் சேனைகளிலிருந்து எழும்பிவந்து நின்று, முன் சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான். 24 இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள். 25 அந்நேரத்திலே இஸ்ரவேலர்: வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்லுகிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து, அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள். 26 அப்பொழுது தாவீது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான். 27 அதற்கு ஜனங்கள்: அவனைக் கொல்லுகிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள். 28 அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான். 29 அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று சொல்லி, 30 அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்பிரகாரமாகவே கேட்டான்; ஜனங்கள் முன்போலவே உத்தரவு சொன்னார்கள். 31 தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலின் சமுகத்தில் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைப்பித்தான். 32 தாவீது சவுலை நோக்கி: இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் என்றான். 33 அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம்பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறுவயதுமுதல் யுத்தவீரன் என்றான். 34 தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒருவிசை ஒரு சிங்கமும், ஒருவிசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. 35 நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்றுபோட்டேன். 36 அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப்போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான். 37 பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான். 38 சவுல் தாவீதுக்குத் தன் வஸ்திரங்களை உடுத்துவித்து வெண்கலமான ஒரு சீராவை அவன் தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் தரிப்பித்தான். 39 அவனுடைய பட்டயத்தை தாவீது தன் வஸ்திரங்கள்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்துபார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக்கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு, 40 தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பருக்குரிய தன்னுடைய அடைப்பப்பையிலே போட்டு, தன் கவணைத் தன் கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனண்டையிலே போனான். 41 பெலிஸ்தனும் நடந்து, தாவீதண்டைக்குக் கிட்டிவந்தான்; பரிசையைப் பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான். 42 பெலிஸ்தன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், அவனை அசட்டைபண்ணினான். 43 பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான். 44 பின்னும் அந்தப் பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: என்னிடத்தில் வா; நான் உன் மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான். 45 அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். 46 இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள். 47 கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான். 48 அப்பொழுது அந்தப் பெலிஸ்தன் எழும்பி, தாவீதுக்கு எதிராகக் கிட்டிவருகையில், தாவீது தீவிரமாய் அந்தச் சேனைக்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி, 49 தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான். 50 இவ்விதமாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது. 51 ஆகையால் தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி அவன்மேல் நின்று, அவன் பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக் கொன்று, அதினாலே அவன் தலையை வெட்டிப்போட்டான்; அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர் கண்டு, ஓடிப்போனார்கள். 52 அப்பொழுது இஸ்ரவேலரும் யூதா மனுஷரும் எழும்பி, ஆர்ப்பரித்து, பள்ளத்தாக்கின் எல்லைமட்டும், எக்ரோனின் வாசல்கள்மட்டும், பெலிஸ்தரைத் துரத்தினார்கள்; சாராயீமின் வழியிலும், காத்பட்டணமட்டும், எக்ரோன் பட்டணமட்டும், பெலிஸ்தர் வெட்டுண்டு விழுந்தார்கள். 53 இஸ்ரவேல் புத்திரர் பெலிஸ்தரை மூர்க்கமாய்த் துரத்தினபிற்பாடு, திரும்பிவந்து, அவர்களுடைய பாளயங்களைக் கொள்ளையிட்டார்கள். 54 தாவீது பெலிஸ்தனுடைய தலையை எடுத்து, அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தான்; அவன் ஆயுதங்களையோ தன் கூடாரத்திலே வைத்தான். 55 தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப்போகிறதைச் சவுல் கண்டபோது, அவன் சேனாபதியாகிய அப்னேரைப் பார்த்து: அப்னேரே, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். 56 அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளையாண்டான் யாருடைய மகன் என்று விசாரி என்றான். 57 தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்புகையில், அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவன் கையில் இருந்தது. 58 அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக் கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாயிருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.

18

1 அவன் சவுலோடே பேசி முடிந்தபின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான். 2 சவுல் அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக ஒட்டாமல், அன்றுமுதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான். 3 யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப்போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். 4 யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சையையும்கூடத் தாவீதுக்குக் கொடுத்தான். 5 தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான். 6 தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பிவந்தபின்பு, ஜனங்கள் திரும்ப வரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல்பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டுவந்தார்கள். 7 அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள். 8 அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, 9 அந்நாள்முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான். 10 மறுநாளிலே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் இறங்கிற்று; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, தன் கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின் கையிலே ஈட்டியிருந்தது. 11 அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டுதரம் அவனுக்குத் தப்பினான். 12 கர்த்தர் தாவீதோடேகூட இருக்கிறார் என்றும் தன்னை விட்டு விலகிப்போனார் என்றும், சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்து, 13 அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம்பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான். 14 தாவீது தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்தான்; கர்த்தர் அவனோடேகூட இருந்தார். 15 அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான். 16 இஸ்ரவேலரும் யூதா ஜனங்களுமாகிய யாவரும் தாவீதைச் சிநேகித்தார்கள்; அவர்களுக்கு முன்பாக அவன் போக்கும் வரத்துமாயிருந்தான். 17 என் கை அல்ல, பெலிஸ்தரின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல சேவகனாய்மாத்திரம் இருந்து, கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான். 18 அப்பொழுது தாவீது சவுலைப் பார்த்து: ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம், என் ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே என் தகப்பன் வம்சமும் எம்மாத்திரம் என்றான். 19 சவுலின் குமாரத்தியாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள். 20 சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது. 21 அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் எண்ணி, தாவீதை நோக்கி: நீ என்னுடைய இரண்டாம் குமாரத்தியினால் இன்று எனக்கு மருமகனாவாய் என்றான். 22 பின்பு சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நீங்கள் தாவீதோடே இரகசியமாய்ப் பேசி: இதோ, ராஜா உன்மேல் பிரியமாயிருக்கிறார்; அவருடைய ஊழியக்காரர் எல்லாரும் உம்மைச் சிநேகிக்கிறார்கள்; இப்போதும் நீர் ராஜாவுக்கு மருமகனானால் நலம் என்று சொல்லுங்கள் என்று கற்பித்தான். 23 சவுலின் ஊழியக்காரர் இந்த வார்த்தைகளைத் தாவீதின் செவிகள் கேட்கப் பேசினார்கள்; அப்பொழுது தாவீது, நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா? நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன் என்றான். 24 தாவீது இன்ன இன்னபடி சொன்னான் என்று சவுலின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவித்தார்கள். 25 அப்பொழுது சவுல்: ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது. 26 அவன் ஊழியக்காரர் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது. 27 அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே, தாவீது எழுந்து, தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தரில் இருநூறுபேரை வெட்டி, அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டுவந்து, தான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். 28 கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்துகொண்டான்; சவுலின் குமாரத்தியாகிய மீகாளும் அவனை நேசித்தாள். 29 ஆகையால் சவுல் இன்னும் அதிகமாய்த் தாவீதுக்குப் பயந்து, தான் உயிரோடிருந்த நாளெல்லாம் தாவீதுக்குச் சத்துருவாயிருந்தான். 30 பெலிஸ்தருடைய பிரபுக்கள் புறப்படுகிறபோதெல்லாம் தாவீது சவுலுடைய ஊழியக்காரர் எல்லாரைப்பார்க்கிலும் புத்திமானாய் நடந்துகொண்டான்; அவன் பேர் மிகவும் கனம்பெற்றது.

19

1 தாவீதைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் தன் குமாரனாகிய யோனத்தானோடும் தன் ஊழியக்காரர் எல்லாரோடும் பேசினான். 2 சவுலின் குமாரனாகிய யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என் தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்றுபோட வகைதேடுகிறார்; இப்போதும் நாளைக்காலமே நீர் எச்சரிக்கையாயிருந்து, மறைவான இடத்தில் ஒளித்துக்கொண்டிரும். 3 நான் புறப்பட்டுவந்து, நீர் வெளியிலிருக்கும் இடத்தில் என் தகப்பன் பக்கத்திலே நின்று, உமக்காக என் தகப்பனோடே பேசி, நடக்கும் காரியத்தைக் கண்டு, உமக்கு அறிவிப்பேன் என்றான். 4 அப்படியே யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலோடே தாவீதுக்காக நலமாய்ப் பேசி, ராஜா தம்முடைய அடியானாகிய தாவீதுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதிருப்பாராக; அவன் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யவில்லை; அவன் செய்கைகள் உமக்கு மெத்த உபயோகமாயிருக்கிறதே. 5 அவன் தன் பிராணனைத் தன் கையிலே வைத்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனைக் கொன்றதினாலே, கர்த்தர் இஸ்ரவேலுக்கெல்லாம் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டதை நீர் கண்டு, சந்தோஷப்பட்டீரே; இப்போதும் முகாந்தரமில்லாமல் தாவீதைக் கொல்லுகிறதினால், குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் பாவஞ்செய்வானேன் என்றான். 6 சவுல் யோனத்தானுடைய சொல்லைக் கேட்டு: அவன் கொலைசெய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான். 7 பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து, அந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து, அவனைச் சவுலண்டையிலே கூட்டிக்கொண்டுபோய் விட்டான்; அப்படியே அவன் முன்போலவே அவனுடைய சமுகத்தில் இருந்தான். 8 மறுபடியும் ஒரு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது தாவீது புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடே யுத்தம்பண்ணி, அவர்களுக்குள் மகா சங்காரம்பண்ணினதினால் அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள். 9 கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் வந்தது; அவன் தன் வீட்டில் உட்கார்ந்து, தன் ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன் கையினாலே சுரமண்டலம் வாசித்தான். 10 அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இராத்திரி ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான். 11 தாவீதைக் காவல்பண்ணி, மறுநாள் காலமே அவனைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான்; இதைத் தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: நீர் இன்று இராத்திரியில் உம்முடைய பிராணனைத் தப்புவித்துக்கொள்ளாவிட்டால், நாளைக்கு நீர் கொன்றுபோடப்படுவீர் என்று சொல்லி, 12 மீகாள் தாவீதை ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான். 13 மீகாளோ ஒரு சுரூபத்தை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத்தோலைப்போட்டு, துப்பட்டியினால் மூடிவைத்தாள். 14 தாவீதைக் கொண்டுவரச் சவுல் சேவகரை அனுப்பினபோது, அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள். 15 அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் சேவகரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படிக்கு, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டுவாருங்கள் என்றான். 16 சேவகர் வந்தபோது, இதோ, சுரூபம் கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள். 17 அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள். 18 தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள். 19 தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது. 20 அப்பொழுது சவுல்: தாவீதைக் கொண்டுவரச் சேவகரை அனுப்பினான்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையும், சாமுவேல் அவர்களின் தலைவனாக நிற்கிறதையும் கண்டார்கள்; அப்பொழுது சவுலினுடைய சேவகரின்மேல் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 21 இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 22 அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. 23 அப்பொழுது ராமாவுக்கடுத்த நாயோதிற்குப் போனான்; அவன்மேலும் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவன் ராமாவுக்கடுத்த நாயோதிலே சேருமட்டும், தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே நடந்துவந்து, 24 தானும் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல் முழுவதும் இராமுழுவதும் வஸ்திரம் இல்லாமல் விழுந்துகிடந்தான்; ஆகையினாலே சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.

20

1 தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என் பிராணனை வாங்கத்தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என் அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்றான். 2 அதற்கு அவன்: அப்படி ஒருக்காலும் வாராது; நீர் சாவதில்லை, இதோ, எனக்கு அறிவிக்காமல் என் தகப்பன் பெரிய காரியமானாலும் சிறிய காரியமானாலும் ஒன்றும் செய்கிறதில்லை; இந்தக் காரியத்தை என் தகப்பன் எனக்கு மறைப்பானேன்? அப்படி இருக்கமாட்டாது என்றான். 3 அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாய் அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனநோவு உண்டாகாதபடிக்கு அவன் இதை அறியப்போகாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று மறுமொழி சொல்லி ஆணையிட்டான். 4 அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: உமது மனவிருப்பம் இன்னது என்று சொல்லும், அதின்படி உமக்குச் செய்வேன் என்றான். 5 தாவீது யோனத்தானை நோக்கி: இதோ, நாளைக்கு அமாவாசி, நான் ராஜாவோடே பந்தியிருந்து சாப்பிடவேண்டியதாயிருக்கும்; ஆனாலும் நான் மூன்றாம் நாள் சாயங்காலமட்டும் வெளியிலே ஒளித்திருக்கும்படி எனக்கு உத்தரவு கொடும். 6 உம்முடைய தகப்பன் என்னைக்குறித்து விசாரித்தால், தன் ஊராகிய பெத்லெகேமிலே தன் குடும்பத்தார் யாவரும் வருஷத்துக்கு ஒருதரம் பலியிட வருகிறபடியால் தாவீது அவ்விடத்திற்குப்போக என்னிடத்தில் வருந்திக் கேட்டான் என்று நீர் சொல்லும். 7 அதற்கு அவர் நல்லது என்றால், உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும்; அவருக்கு எரிச்சலுண்டானால், அவராலே பொல்லாப்புத் தீர்மானப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர். 8 ஆகையால் உம்முடைய அடியானுக்குத் தயைசெய்யவேண்டும்; கர்த்தருக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை பண்ணியிருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்துக்குக் கொண்டுபோகவேண்டியது என்ன என்றான். 9 அப்பொழுது யோனத்தான்: அப்படி உமக்கு வராதிருப்பதாக; உமக்குப் பொல்லாப்புச் செய்ய என் தகப்பனாலே தீர்மானித்திருக்கிறது என்று நான் நிச்சயமாய் அறிந்தேனானால் நான் அதை உமக்கு அறிவிக்காதிருப்பேனா என்றான். 10 தாவீது யோனத்தானை நோக்கி: உம்முடைய தகப்பன் கடினமான உத்தரம் சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார் என்றான். 11 அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான்; இருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள். 12 அப்பொழுது யோனத்தான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை முன்னிட்டுத் தாவீதை நோக்கி: நான் நாளையாவது மறுநாளிலாவது என் தகப்பனுடைய மனதை அறிந்துகொண்டு, அவர் தாவீதின்மேல் தயவாயிருக்கிறார் என்று கண்டும், அதை அப்போது உமது செவிகளுக்கு வெளிப்படுத்தும்படிக்கு, உமக்குச் சொல்லியனுப்பாதிருந்தால், 13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் யோனத்தானுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர்; ஆனாலும் உமக்குத் தீங்கு செய்ய என் தகப்பனுக்குப் பிரியமாயிருந்தால், அதை உமது செவிகளுக்கு வெளிப்படுத்தி, நீர் சமாதானத்தோடே போகும்படிக்கு உம்மை அனுப்பிவிடுவேன்; கர்த்தர் என் தகப்பனோடு இருந்ததுபோல், உம்மோடும் இருப்பாராக. 14 மேலும், நான் உயிரோடிருக்கையில், நான் சாகாதபடிக்கு நீர் கர்த்தரின் நிமித்தமாய் எனக்குத் தயைசெய்யவேண்டியதும் அல்லாமல், 15 கர்த்தர் தாவீதின் சத்துருக்களாகிய ஒவ்வொருவரையும் பூமியின்மேல் இராதபடிக்கு, வேர்அறுக்கும்போதும், நீர் என்றைக்கும் உமது தயவை என் வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான். 16 இப்படி யோனத்தான் தாவீதின் குடும்பத்தோடே உடன்படிக்கைபண்ணி, தாவீதுடைய சத்துருக்களின் கையிலே கர்த்தர் கணக்குக் கேட்பாராக என்று சொல்லி, 17 யோனத்தான் தாவீதை மிகவும் சிநேகித்தபடியினால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான். 18 பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசி, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும். 19 காரியம் நடந்தபோது, மூன்றாம் நாளிலே நீர் ஒளித்திருக்கும் இடத்திற்குத் தீவிரித்து வந்து, ஏசேல் என்னும் கல்லண்டையில் உட்கார்ந்திரும். 20 அப்பொழுது நான் குறிப்புவைத்து எய்கிறதுபோல, அதற்குப் பக்கமாக மூன்று அம்புகளை எய்து: 21 நீ போய், அந்த அம்புகளைத் தேடி வா என்று ஒரு பிள்ளையாண்டானை அனுப்புவேன்; இதோ, அம்புகள் உனக்கு இப்புறத்திலே கிடக்கிறது, அவைகளை எடுத்துக்கொண்டுவா என்று பிள்ளையாண்டானிடத்தில் நான் சொன்னால், நீர் வாரும்; அப்பொழுது ஒன்றும் இல்லை, உமக்குச் சமாதானம் இருக்கும் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 22 இதோ, அம்புகள் உனக்கு அப்புறத்திலே கிடக்கிறது என்று நான் அந்தப் பிள்ளையாண்டானிடத்தில் சொன்னால், நீர் போய்விடும்; அப்பொழுது கர்த்தர் உம்மைப் போகச்சொல்லுகிறார் என்று அறியும். 23 நீரும் நானும் பேசிக்கொண்ட காரியத்திற்கு, இதோ, கர்த்தர் எனக்கும் உமக்கும் என்றைக்கும் நடுநிற்கும் சாட்சி என்றான். 24 அப்படியே தாவீது வெளியிலே ஒளித்துக்கொண்டிருந்தான்; அமாவாசியானபோது ராஜா போஜனம்பண்ண உட்கார்ந்தான். 25 ராஜா சுவரண்டையிலிருக்கிற தன் இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்திருந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது. 26 ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானாக்கும், அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை. 27 அமாவாசிக்கு மறுநாளிலும் தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது; அப்பொழுது சவுல்: ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் போஜனத்துக்கு வராதேபோனது என்ன என்று தன் குமாரனாகிய யோனத்தானைக் கேட்டான். 28 யோனத்தான் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: பெத்லெகேம்மட்டும் போக, தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு, 29 அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என் தமையன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்ததானால், நான் என் சகோதரரைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்தரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான். 30 அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபமூண்டவனாகி, அவனைப் பார்த்து: இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்துகொண்டிருக்கிறதை நான் அறியேனோ? 31 ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும் உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான். 32 யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலுக்குப் பிரதியுத்தரமாக: அவன் ஏன் கொல்லப்படவேண்டும்? அவன் என்ன செய்தான் என்றான். 33 அப்பொழுது சவுல்: அவனைக் குத்திப்போட அவன்மேல் ஈட்டியை எறிந்தான்; ஆகையால் தாவீதைக் கொன்றுபோடத் தன் தகப்பன் தீர்மானித்திருக்கிறான் என்பதை யோனத்தான் அறிந்துகொண்டு, 34 கோபதாபமாய் பந்தியைவிட்டு எழுந்திருந்துபோய், அமாவாசியின் மறுநாளாகிய அன்றையதினம் போஜனம்பண்ணாதிருந்தான்; தன் தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனநோவாயிருந்தது. 35 மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்தநேரத்திலே ஒரு சிறுபிள்ளையாண்டானைக் கூட்டிக்கொண்டு, வெளியே புறப்பட்டுப்போய்: 36 பிள்ளையாண்டானை நோக்கி: நீ ஓடி, நான் எய்கிற அம்புகளைத் தேடி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி, அந்தப் பிள்ளையாண்டான் ஓடும்போது, அவனுக்கு அப்பாலே போகும்படி ஒரு அம்பை எய்தான். 37 யோனத்தான் எய்த அம்பிருக்கும் இடமட்டும் பிள்ளையாண்டான் போனபோது, அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது அல்லவா என்று யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான். 38 நீ தரித்துநிற்காமல் தீவிரித்துப் பொட்டெனப்போ என்றும் யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின் பிள்ளையாண்டான் அம்புகளைப் பொறுக்கி, தன் எஜமானிடத்தில் கொண்டுவந்தான். 39 அந்தக் காரியம் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் தெரிந்திருந்ததேயல்லாமல், அந்தப் பிள்ளையாண்டானுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது. 40 அப்பொழுது யோனத்தான்: தன் ஆயுதங்களைப் பிள்ளையாண்டானிடத்தில் கொடுத்து, இவைகளைப் பட்டணத்திற்குக் கொண்டுபோ என்றான். 41 பிள்ளையாண்டான் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்துவந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்றுவிசை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தஞ்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான். 42 அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக் கொண்டதை நினைத்துக் கொள்ளும் என்றான். (43) பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப்போனான்; யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்.

21

1 தாவீது நோபிலிருக்கிற ஆசாரியனாகிய அகிமெலேக்கினிடத்தில் போனான்; அகிமெலேக்கு நடுக்கத்தோடே தாவீதுக்கு எதிர்கொண்டுபோய்: ஒருவரும் உம்மோடே கூடவராமல், நீர் ஒண்டியாய் வருகிறது என்ன என்று அவனைக் கேட்டான். 2 தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்த்து: ராஜா எனக்கு ஒரு காரியத்தைக் கட்டளையிட்டு, நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்கவேண்டும் என்று என்னோடே சொன்னார்; இன்ன இடத்திற்கு வரவேண்டும் என்று சேவகருக்குச் சொல்லியிருக்கிறேன். 3 இப்போதும் உம்முடைய கையில் இருக்கிறது என்ன? ஐந்து அப்பமாகிலும், என்னவாகிலும், இருக்கிறதை என் கையிலே கொடும் என்றான். 4 ஆசாரியன் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த அப்பம் இருக்கிறதே ஒழிய, சாதாரண அப்பம் என் கையில் இல்லை; வாலிபர் ஸ்திரீகளோடேமாத்திரம் சேராதிருந்தால் கொடுப்பேன் என்றான். 5 தாவீது ஆசாரியனுக்குப் பிரதியுத்தரமாக: நான் புறப்படுகிறதற்கு முன் நேற்றும் முந்தாநாளும் ஸ்திரீகள் எங்களுக்கு விலக்கமாயிருந்தார்கள்; வாலிபருடைய அசம்பிகளும் சுத்தமாயிருக்கிறது; இன்றையதினம் வேறே அப்பம் பாத்திரத்தில் பிரதிஷ்டைபண்ணப்பட்டதினால், இது சாதாரணமாயிற்றே என்றான். 6 அப்பொழுது கர்த்தருடைய சந்நிதியிலிருந்து எடுக்கப்பட்ட சமுகத்தப்பங்களைத்தவிர, வேறே அப்பம் அங்கே இராதபடியினால் ஆசாரியன் அவனுக்குப் பரிசுத்த அப்பத்தைக் கொடுத்தான்; அவைகள் எடுக்கப்படுகிற நாளிலே அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் வைக்கப்படும். 7 சவுலுடைய வேலைக்காரரில் ஏதோமியனாகிய தோவேக்கு என்னும் பேருள்ள ஒருவன் அன்றையதினம் அங்கே கர்த்தருடைய சந்நிதியில் தடைபட்டிருந்தான்; அவன் சவுலுடைய மேய்ப்பருக்குத் தலைவனாயிருந்தான். 8 தாவீது அகிமெலேக்கைப் பார்த்து: இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியானாலும் பட்டயமானாலும் இல்லையா? ராஜாவின் காரியம் அவசரமானபடியினால், என் பட்டயத்தையாகிலும், என் ஆயுதங்களையாகிலும், நான் எடுத்துக் கொண்டுவரவில்லை என்றான். 9 அதற்கு ஆசாரியன்: நீர் ஏலே பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம், இதோ, ஏபோத்துக்குப் பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைத்திருக்கிறது; அதை நீர் எடுக்க மனதானால் எடுத்துக்கொண்டுபோம், அதுவே அல்லாமல் வேறொன்றும் இங்கே இல்லை என்றான்; அப்பொழுது தாவீது: அதற்கு நிகரில்லை; அதை எனக்குத் தாரும் என்றான். 10 அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான். 11 ஆகீசின் ஊழியக்காரர் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இவனைக்குறித்தல்லவோ ஆடல்பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள். 12 இந்த வார்த்தைகளைத் தாவீது தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு, 13 அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன்போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக் கொண்டிருந்தான். 14 அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரரை நோக்கி: இதோ, இந்த மனுஷன் பித்தங்கொண்டவன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டுவந்தது என்ன? 15 எனக்கு முன்பாகப் பயித்திய சேஷ்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டுவருகிறதற்கு, பயித்தியக்காரர் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிலே வரலாமா என்றான்.

22

1 தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள். 2 ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப்பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள். 3 தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவுசெய்யும் என்று சொல்லி, 4 அவர்களை மோவாபின் ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டுபோய்விட்டான்; தாவீது அரணில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள். 5 பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதாதேசத்திற்குப் புறப்பட்டுவாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான். 6 தாவீதும் அவனோடிருந்த மனுஷரும் காணப்பட்ட செய்தியைச் சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர் எல்லாரும் தன்னைச் சூழ்ந்துநிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும்போது, 7 சவுல் தன்னண்டையில் நிற்கிற தன் ஊழியக்காரரைப் பார்த்து: பென்யமீன் புத்திரரே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்களெல்லாருக்கும் வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லாரையும் ஆயிரத்துக்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ? 8 நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா? இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண, என் குமாரன் என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டானே என்றான். 9 அப்பொழுது சவுலின் ஊழியக்காரரோடே நின்ற ஏதோமியனாகிய தோவேக்கு பிரதியுத்தரமாக: ஈசாயின் மகனை நோபிலிருக்கிற அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கிடத்தில் வரக்கண்டேன். 10 இவன் அவனுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு போஜனத்தைக் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான். 11 அப்பொழுது ராஜா: அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக் என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டாராகிய எல்லா ஆசாரியரையும் அழைப்பித்தான்; அவர்களெல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள். 12 அப்பொழுது சவுல்: அகிதூபின் குமாரனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என் ஆண்டவனே என்றான். 13 அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண அவன் எனக்கு விரோதமாக எழும்பும்படிக்கு, நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான். 14 அகிமெலேக் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய எல்லா ஊழியக்காரரிலும் தாவீதைப்போல, ராஜாவுக்கு மருமகனும், உம்முடைய கட்டளைகளின்படி செய்துவருகிறவனும், உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்? 15 இன்றையதினம் அவனுக்காக தேவ சந்நிதியில் விசாரிக்கத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன்மேலாகிலும் குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திருந்ததில்லை என்றான். 16 ராஜாவோ: அகிமெலேக்கே, நீயும் உன் தகப்பன் வீட்டார் அனைவரும் சாகவே சாகவேண்டும் என்றான். 17 பின்பு ராஜா தன்னண்டையிலே நிற்கிற சேவகரை நோக்கி: நீங்கள் போய், கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்; அவர்கள் கையும் தாவீதோடே இருக்கிறது; அவன் ஓடிப்போகிறதை அவர்கள் அறிந்திருந்தும், அதை எனக்கு வெளிப்படுத்தவில்லை என்றான்; ராஜாவின் வேலைக்காரரோ, கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லத் தங்கள் கைகளை நீட்ட சம்மதிக்கவில்லை. 18 அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருக்கும் எண்பத்தைந்துபேரை அன்றையதினம் கொன்றான். 19 ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டான். 20 அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கின் குமாரரில் அபியத்தார் என்னும் பேருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் புறமாக ஓடிப்போய், 21 சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான். 22 அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்தபடியினாலே, அவன் எவ்விதத்திலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன் தகப்பன் வீட்டாராகிய எல்லாருடைய மரணத்துக்கும் காரணம் நானே. 23 நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் பிராணனை வாங்கத்தேடுகிறவனே உன் பிராணனையும் வாங்கத்தேடுகிறான்; நீ என் ஆதரவிலே இரு என்றான்.

23

1 இதோ, பெலிஸ்தர் கேகிலாவின்மேல் யுத்தம்பண்ணி, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. 2 அப்பொழுது தாவீது: நான் போய், அந்தப் பெலிஸ்தரை முறிய அடிக்கலாமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, கர்த்தர்: நீ போ; பெலிஸ்தரை முறிய அடித்து, கேகிலாவை ரட்சிப்பாயாக என்று தாவீதுக்குச் சொன்னார். 3 ஆனாலும் தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம்; நாங்கள் பெலிஸ்தருடைய சேனைகளை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப் போனால், எவ்வளவு அதிகம் என்றார்கள். 4 அப்பொழுது தாவீது திரும்பவும் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர் அவனுக்கு உத்தரமாக: நீ எழும்பி, கேகிலாவுக்குப் போ; நான் பெலிஸ்தரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார். 5 அப்படியே தாவீது தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, கேகிலாவுக்குப் போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, அவர்களில் அநேகம்பேரை வெட்டி, அவர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டுபோனான்; இவ்விதமாய்க் கேகிலாவின் குடிகளை ரட்சித்தான். 6 அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் கேகிலாவில் இருக்கிற தாவீதினிடத்தில் தப்பியோடுகிறபோது, அவனிடத்தில் ஒரு ஏபோத்து இருந்தது. 7 தாவீது கேகிலாவுக்கு வந்தான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தேவன் அவனை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணத்திற்குள் பிரவேசித்ததினால், அடைபட்டிருக்கிறான் என்று சவுல் சொல்லி, 8 தாவீதையும் அவன் மனுஷரையும் முற்றிக்கை போடும்படிக்கு, கேகிலாவுக்குப் போக, எல்லா ஜனத்தையும் யுத்தத்திற்கு அழைப்பித்தான். 9 தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான். 10 அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னிமித்தம் பட்டணத்தை அழிக்க வகைதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன். 11 கேகிலா பட்டணத்தார் என்னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் கர்த்தர்: அவன் வருவான் என்றார். 12 கேகிலாபட்டணத்தார் என்னையும் என் மனுஷரையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, கர்த்தர்: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார். 13 ஆகையால் தாவீதும் ஏறக்குறைய அறுநூறுபேராகிய அவன் மனுஷரும் எழும்பி, கேகிலாவை விட்டுப் புறப்பட்டு, போகக்கூடிய இடத்திற்குப் போனார்கள்; தாவீது கேகிலாவிலிருந்து தப்பிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தான் புறப்படுகிறதை நிறுத்திவிட்டான். 14 தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அநுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை. 15 தன் பிராணனை வாங்கத் தேடும்படிக்கு, சவுல் புறப்பட்டான் என்று தாவீது அறிந்தபடியினாலே, தாவீது சீப் வனாந்தரத்திலுள்ள ஒரு காட்டிலே இருந்தான். 16 அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி: 17 நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான். 18 அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கை பண்ணினபின்பு, தாவீது காட்டில் இருந்துவிட்டான்; யோனத்தானோ தன் வீட்டிற்குப் போனான். 19 பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா? 20 இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கி வாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள். 21 அதற்கு சவுல்: நீங்கள் என்மேல் தயை வைத்ததினாலே, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக. 22 நீங்கள் போய், அவன் கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாய் விசாரித்து அறியுங்கள்; அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரியவந்தது. 23 அவன் ஒளித்துக்கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் பார்த்தறிந்து கொண்டு, நிச்சய செய்தி எனக்குக் கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் உங்களோடே கூடவந்து, அவன் தேசத்தில் இருந்தால், யூதாவிலிருக்கிற சகல ஆயிரங்களுக்குள்ளும் அவனைத் தேடிப் போவேன் என்றான். 24 அப்பொழுது அவர்கள் எழுந்து, சவுலுக்கு முன்னாலே சீப் ஊருக்குப் போனார்கள்; தாவீதும் அவன் மனுஷரும் எஷிமோனுக்குத் தெற்கான அந்தர வெளியாகிய மாகோன் வனாந்தரத்தில் இருந்தார்கள். 25 சவுலும் அவன் மனுஷரும் தாவீதைத் தேடவருகிறார்கள் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் கன்மலையிலிருந்து இறங்கி, மாகோன் வனாந்தரத்திலே தங்கினான்; அதைச் சவுல் கேள்விப்பட்டு, மாகோன் வனாந்தரத்திலே தாவீதைப் பின் தொடர்ந்தான். 26 சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத்தக்கதாய் அவர்களை வளைந்துகொண்டார்கள். 27 அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான். 28 அதனால் சவுல் தாவீதைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான்; ஆதலால் அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத் என்று பேரிட்டார்கள். 29 தாவீது அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள அரணிப்பான இடங்களில் தங்கினான்.

24

1 சவுல் பெலிஸ்தரைப் பின்தொடர்ந்து திரும்பிவந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. 2 அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான். 3 வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு கெபி இருந்தது; அதிலே சவுல் மலஜலாதிக்குப் போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அந்தக் கெபியின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள். 4 அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான். 5 தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்தது. 6 அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி, 7 தன் மனுஷரைச் சவுலின்மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடைபண்ணினான்; சவுல் எழுந்திருந்து, கெபியைவிட்டு, வழியே நடந்துபோனான். 8 அப்பொழுது தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாகப் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப்பார்த்தபோது, தாவீது தரைமட்டும் முகங்குனிந்து வணங்கி, 9 சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்? 10 இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது; என் ஆண்டவன்மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன். 11 என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்றுபோடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர். 12 கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, கர்த்தர் தாமே என் காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை. 13 முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை. 14 இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர்? 15 கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான். 16 தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என் குமாரனாகிய தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது, 17 தாவீதைப் பார்த்து: நீ என்னைப்பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமை செய்தேன். 18 நீ எனக்கு நன்மை செய்ததை இன்று விளங்கப்பண்ணினாய்; கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்றுபோடவில்லை. 19 ஒருவன் தன் மாற்றானைக் கண்டுபிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக. 20 நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன். 21 இப்போதும் நீ எனக்குப் பின்னிருக்கும் என் சந்ததியை வேரறுப்பதில்லை என்றும், என் தகப்பன் வீட்டாரில் என் பெயரை அழித்துப்போடுவதில்லை என்றும் கர்த்தர்மேல் எனக்கு ஆணையிட்டுக் கொடு என்றான். 22 அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக் கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.

25

1 சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; தாவீது எழுந்து, பாரான் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப்போனான். 2 மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான்; அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது; அந்த மனுஷன் மகா பாரிக் குடித்தனக்காரனாயிருந்தான்; அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது; அவன் அப்பொழுது கர்மேலில் தன் ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான். 3 அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர்; அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தப் புருஷனோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான்; அவன் காலேபுடைய சந்ததியான். 4 நாபால் தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கிற செய்தியை வனாந்தரத்தில் இருக்கிற தாவீது கேட்டபோது, 5 தாவீது பத்து வாலிபரை அழைத்து: நீங்கள் கர்மேலுக்குப் போய், நாபாலிடத்தில் சென்று, என் பேரைச்சொல்லி, அவன் சுகசெய்தியை விசாரித்து, 6 அவனை நோக்கி: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி, 7 இப்பொழுது ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்; உம்முடைய மேய்ப்பர் எங்களோடேகூட இருந்தார்கள்; அவர்கள் கர்மேலில் இருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை; அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற்போனதும் இல்லை. 8 உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபருக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கைக்கு உதவுவதை உம்முடைய ஊழியக்காரருக்கும், உம்முடைய குமாரனாகிய தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான். 9 தாவீதின் வாலிபர் போய், இந்த வார்த்தைகளையெல்லாம் தாவீதின் நாமத்தினாலே நாபாலிடத்தில் சொல்லி, பின்னொன்றும் பேசாதிருந்தார்கள். 10 நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு. 11 நான் என் அப்பத்தையும், என் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான். 12 தாவீதின் வாலிபர் தங்கள் வழியே திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள். 13 அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான்; அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொண்டார்கள்; தாவீதும் தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான்; ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுக்குப் பின்சென்று புறப்பட்டுப்போனார்கள்; இருநூறுபேர் ரஸ்துக்கள் அண்டையில் இருந்துவிட்டார்கள். 14 அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலை நோக்கி: இதோ, நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்கத் தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான்; அவர்கள்பேரில் அவர் சீறினார். 15 அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள்; நாங்கள் வெளிகளில் இருக்கும்போது, அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை; நமது பொருளில் ஒன்றும் காணாமற் போனதுமில்லை. 16 நாங்கள் ஆடுகளை மேய்த்து, அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும்பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள். 17 இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான் மேலும், அவருடைய வீட்டார் யாவர்மேலும், நிச்சயமாய் ஒரு பொல்லாப்பு வருகிறதாயிருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக்கூடாதபடிக்கு, பேலியாளின் மகனாயிருக்கிறார் என்றான். 18 அப்பொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல்பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி, 19 தன் வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன் புருஷனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை. 20 அவள் ஒரு கழுதையின்மேல் ஏறி, மலையின் மறைவில் இறங்கிவருகையில், இதோ, தாவீதும் அவன் மனுஷரும் அவளுக்கு எதிராக இறங்கிவந்தார்கள்; அவர்களைச் சந்தித்தாள். 21 தாவீது தன் ஜனங்களை நோக்கி: அவனுக்கு வனாந்தரத்தில் இருக்கிறதையெல்லாம் வீணாகவே காப்பாற்றினேன்; அவனுக்கு உண்டானதிலெல்லாம் ஒன்றும் காணாமற்போனதில்லை; என்றாலும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமை செய்தான். 22 அவனுக்கு உண்டான எல்லாவற்றிலும் சுவரில் நீர்விடும் ஒரு நாயைமுதலாய்ப் பொழுதுவிடியுமட்டும் நான் உயிரோடே வைத்தால், தேவன் தாவீதின் சத்துருக்களுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று சொல்லியிருந்தான். 23 அபிகாயில் தாவீதைக் காண்கையில், தீவிரமாய்க் கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து, 24 அவன் பாதத்திலே விழுந்து: என் ஆண்டவனே, இந்தப் பாதகம் என்மேல் சுமரட்டும்; உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவிகேட்கப் பேசவேண்டும். 25 என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்; அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான்; அவன் பெயர் நாபால், அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது; உம்முடைய அடியாளாகிய நானோ, என் ஆண்டவன் அனுப்பின வாலிபரைக் காணவில்லை. 26 இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், கர்த்தர் உமக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன்; இப்போதும் உம்முடைய சத்துருக்களும், என் ஆண்டவனுக்கு விரோதமாகப் பொல்லாப்புத் தேடுகிறவர்களும், நாபாலைப்போல ஆகக்கடவர்கள். 27 இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக. 28 உமது அடியாளின் பாதகத்தை மன்னியும், கர்த்தர் என் ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்; என் ஆண்டவன் கர்த்தருடைய யுத்தங்களை நடத்துகிறவராமே; நீர் உயிரோடே இருக்கும் நாளில் ஒரு பொல்லாப்பும் உம்மிலே காணப்படாதிருப்பதாக. 29 உம்மைத் துன்பப்படுத்தவும், உம்முடைய பிராணனை வாங்க வகைதேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்; உம்முடைய சத்துருக்களின் ஆத்துமாக்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல எறியப்பட்டுப்போம். 30 கர்த்தர் உம்மைக்குறித்துச் சொன்ன நன்மையின்படி எல்லாம் இனி என் ஆண்டவனுக்குச் செய்து, இஸ்ரவேலுக்கு அதிபதியாக உம்மை நேமிக்கும் போது, 31 நீர் விருதாவாய் இரத்தம் சிந்தாமலும், என் ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என் ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இராது, மன இடறலும் இராது; கர்த்தர் என் ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது, உம்முடைய அடியாளை நினைப்பீராக என்றாள். 32 அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 33 நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடை பண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக. 34 நீ தீவிரமாய் என்னைச் சந்திக்க வராமல் இருந்தாயானால், பொழுது விடியுமட்டும் நாபாலுக்கு ஒரு நாயும் உயிரோடே வைக்கப்படுவதில்லை என்று, உனக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு இடங்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு மெய்யாய்ச் சொல்லுகிறேன் என்று சொல்லி, 35 அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கிக்கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ; இதோ, நான் உன் சொல்லைக்கேட்டு, உன் முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான். 36 அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் மிகவும் வெறித்துமிருந்தான்; ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை. 37 பொழுது விடிந்து, நாபாலின் வெறி தெளிந்தபின்பு, அவன் மனைவி இந்த வர்த்தமானங்களை அவனுக்கு அறிவித்தாள்; அப்பொழுது அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப்போலானான். 38 கர்த்தர் நாபாலை வாதித்ததினால், ஏறக்குறையப் பத்து நாளுக்குப்பின்பு, அவன் செத்தான். 39 நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது: என் நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து, தம்முடைய அடியானைப் பொல்லாப்புச் செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; கர்த்தர் தாமே நாபாலின் பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார் என்று சொல்லி, அபிகாயிலை விவாகம்பண்ணுகிறதற்காக அவளோடே பேச, தாவீது ஆட்களை அனுப்பினான். 40 தாவீதின் ஊழியக்காரர் கர்மேலில் இருக்கிற அபிகாயிலண்டைக்கு வந்து, தாவீது உன்னை விவாகம்பண்ண மனதாய், எங்களை உன்னிடத்தில் அனுப்பினார் என்று அவளோடே சொல்லுகிறபோது, 41 அவள் எழுந்திருந்து, தரைமட்டும் முகங்குனிந்து, இதோ, நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவத்தக்க பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்றாள். 42 பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து தாதிப் பெண்களைக் கூட்டிக்கொண்டு, தாவீதின் ஸ்தானாபதிகளுக்குப் பின்சென்று போய், அவனுக்கு மனைவியானாள். 43 யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும் தாவீது விவாகம்பண்ணினான்; அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவிகளானார்கள். 44 சவுல் தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன் குமாரத்தியைக் காலீம் ஊரானாகிய லாயீசின் குமாரனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான்.

26

1 பின்பு சீப்ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள். 2 அப்பொழுது சவுல்: சீப்வனாந்தரத்திலே தாவீதைத் தேடும்படி எழுந்து, இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம் பேரோடுங்கூட, சீப் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப்போனான். 3 சவுல் எஷிமோனுக்கு எதிரே வழியண்டையிலிருக்கிற ஆகிலாமேட்டிலே பாளயமிறங்கினான்; தாவீது வனாந்தரத்தில் தங்கி, சவுல் தன்னைத் தொடர்ந்து வனாந்தரத்திற்கு வருகிறதைக் கண்டு, 4 தாவீது வேவுகாரரை அனுப்பி, சவுல் வந்தது நிச்சயம் என்று அறிந்துகொண்டான். 5 பின்பு தாவீது எழுந்து, சவுல் பாளயமிறங்கின இடத்திற்குப் போய், சவுலும் நேரின் குமாரனாகிய அப்னேர் என்னும் அவன் படைத்தலைவனும் படுத்துக்கொண்டிருக்கிற இடத்தைப் பார்த்தான்; சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; ஜனங்கள் அவனைச் சுற்றிலும் பாளயமிறங்கியிருந்தார்கள். 6 தாவீது ஏத்தியனாகிய அகிமெலேக்கையும், செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயையும் பார்த்து: என்னோடேகூடச் சவுலிடத்திற்குப் பாளயத்தில் இறங்கிவருகிறவன் யார் என்றதற்கு, அபிசாய்: நான் உம்மோடேகூட வருகிறேன் என்றான். 7 அப்படியே தாவீதும் அபிசாயும் இராத்திரியிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள்; இதோ, சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து நித்திரைபண்ணினான்; அவன் தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது; அவனைச் சுற்றிலும் அப்னேரும் ஜனங்களும் படுத்துக்கொண்டிருந்தார்கள். 8 அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக் குத்தட்டுமா என்றான். 9 தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? என்று சொன்னான். 10 பின்னும் தாவீது: கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப்போய் மாண்டாலொழிய, 11 நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம்பண்ணுவித்தவர்மேல் போடாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும், தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்டு போவோம் என்றான். 12 தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்ச்செம்பையும் எடுத்துக்கொண்டபின்பு, புறப்பட்டுப்போனார்கள்; அதை ஒருவரும் காணவில்லை, அறியவுமில்லை, ஒருவரும் விழித்துக்கொள்ளவுமில்லை; கர்த்தர் அவர்களுக்கு அயர்ந்த நித்திரை வருவித்ததினால், அவர்களெல்லாரும் தூங்கினார்கள். 13 தாவீது கடந்து, அந்தப் பக்கத்திற்குப் போய், தங்களுக்கும் அவர்களுக்கும் நடுவே போந்த இடமுண்டாக, தூரத்திலிருக்கிற மலையின் கொடுமுடியிலே, 14 ஜனங்களுக்கும் நேரின் குமாரனாகிய அப்னேருக்கும் நேராக நின்று கூப்பிட்டு: அப்னேரே, உத்தரவு சொல்லமாட்டீரா என்றான்; அதற்கு அப்னேர்: ராஜாவுக்கு நேராகக் கூக்குரலிடுகிற நீ யார் என்றான். 15 அப்பொழுது தாவீது அப்னேரை நோக்கி: நீர் வீரன் அல்லவா? இஸ்ரவேலில் உமக்குச் சரியானவன் யார்? பின்னை நீர் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் காக்காமற் போனதென்ன? ஜனத்தில் ஒருவன் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் கொல்லும்படி வந்திருந்தானே. 16 நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல; கர்த்தர் அபிஷேகம்பண்ணின உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமற் போனபடியினால், நீங்கள் மரணத்திற்குப் பாத்திரவான்கள்; இப்போதும் ராஜாவின் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்டியும் தண்ணீர்ச் செம்பும் எங்கே என்று பாரும் என்றான். 17 அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என் குமாரனாகிய தாவீதே, இது உன் சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது: ராஜாவாகிய என் ஆண்டவனே, இது என் சத்தந்தான் என்று சொல்லி, 18 பின்னும்: என் ஆண்டவனாகிய நீர் உம்முடைய அடியானை இப்படிப் பின்தொடருகிறது என்ன? நான் என்ன செய்தேன்? என்னிடத்தில் என்ன பொல்லாப்பு இருக்கிறது? 19 இப்பொழுது ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய அடியானுடைய வார்த்தைகளைக் கேட்பாராக; கர்த்தர் உம்மை எனக்கு விரோதமாக எடுத்து விட்டதுண்டானால், அதற்கு அவர் காணிக்கையை ஏற்றுக்கொள்வாராக; மனுபுத்திரர் அதைச் செய்தார்களேயாகில், அவர்கள் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்படக்கடவர்கள்; அவர்கள்: நீ போய்; அந்நிய தேவர்களைச் சேவி என்று சொல்லி, அவர்கள் இன்று என்னைக் கர்த்தருடைய சுதந்தரத்திற்கு அடுத்தவனாயிராதபடிக்கு, துரத்திவிட்டார்களே. 20 இப்போதும் கர்த்தருடைய சமுகத்தில் என் இரத்தம் தரையில் விழாதிருப்பதாக; மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுகிறதுபோல, இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான். 21 அப்பொழுது சவுல்: நான் பாவஞ்செய்தேன்; என் குமாரனாகிய தாவீதே, திரும்பிவா; என் ஜீவன் இன்றையதினம் உன் பார்வைக்கு அருமையாயிருந்தபடியால், இனி உனக்கு ஒரு பொல்லாப்புஞ் செய்யேன்; இதோ, நான் மதியற்றவனாய் மகா பெரிய தப்பிதஞ்செய்தேன் என்றான். 22 அதற்குத் தாவீது: இதோ, ராஜாவின் ஈட்டி இங்கே இருக்கிறது; வாலிபரில் ஒருவன் இப்புறம் வந்து, அதை வாங்கிக் கொண்டுபோகட்டும். 23 கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப் பலன் அளிப்பாராக; இன்று கர்த்தர் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம்பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன். 24 இதோ, உம்முடைய ஜீவன் இன்றையதினம் என் பார்வைக்கு எப்படி அருமையாயிருந்ததோ, அப்படியே என் ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிருப்பதினால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவாராக என்றான். 25 அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய் என்றான்; அப்படியே தாவீது தன் வழியே போனான்; சவுலும் தன் ஸ்தானத்திற்குத் திரும்பினான்.

27

1 பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதைப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான். 2 ஆகையால் தாவீது தன்னோடிருந்த அறுநூறுபேரோடுங்கூட எழுந்திருந்து, மாயோகின் குமாரனாகிய ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான். 3 அங்கே தாவீதும், அவன் மனுஷரும், அவரவர் வீட்டாரும், தாவீதோடேகூட அவன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமும்; நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளாகிய அபிகாயிலும், காத்பட்டணத்தில் ஆகீசிடத்தில் தங்கியிருந்தார்கள். 4 தாவீது காத்பட்டணத்திற்கு ஓடிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் அப்புறம் அவனைத் தேடவில்லை. 5 தாவீது ஆகீசை நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்குமானால், நான் வாசம்பண்ணும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடந்தாரும்; உம்முடைய அடியான் உம்மோடேகூட ராஜதானி பட்டணத்திலே வாசமாயிருப்பானேன் என்றான். 6 அப்பொழுது ஆகீஸ்: அன்றையதினம் சிக்லாகை அவனுக்குக் கொடுத்தான்; அதினிமித்தம் சிக்லாக் இந்நாள்வரைக்கும் யூதாவின் ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது. 7 தாவீது பெலிஸ்தரின் நாட்டிலே ஒரு வருஷமும் நாலு மாதமும் குடியிருந்தான். 8 அங்கேயிருந்து தாவீதும் அவன் மனுஷரும் கெசூரியர்மேலும் கெஸ்ரியர்மேலும் அமலேக்கியர்மேலும் படையெடுத்துப்போனார்கள்; சூருக்குப் போகிற எல்லைதுவக்கி எகிப்துதேசமட்டும் இருக்கிற நாட்டிலே பூர்வகாலம் துவக்கிக் குடியிருந்தவர்கள் இவர்களே. 9 தாவீது அந்த நாட்டைக் கொள்ளையடிக்கிறபோது, புருஷர்களையும் ஸ்திரீகளையும் உயிரோடே வைக்காமல், ஆடுமாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு, ஆகீசிடத்துக்குத் திரும்பிவருவான். 10 இன்று எத்திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தென்திசையிலும், யெராமியேலருடைய தென்திசையிலும், கேனியருடைய தென்திசையிலும் என்பான். 11 இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒருவரையும் தாவீது காத்பட்டணத்திற்குக் கொண்டு வராதபடிக்கு, ஒரு புருஷனையாகிலும் ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தரின் நாட்டுப்புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டுவந்தான். 12 ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.

28

1 அந்நாட்களிலே பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண, தங்கள் சேனைகளைப் போருக்குக் கூட்டினார்கள்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன் மனுஷரும் எவ்விதத்திலும் என்னோடேகூட யுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறியக்கடவாய் என்றான். 2 தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை எந்நாளும் எனக்கு மெய்காவலனாக வைப்பேன் என்றான். 3 சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப்போனான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குத் துக்கங்கொண்டாடி, அவன் ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம் பண்ணினார்கள். சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டான். 4 பெலிஸ்தர் கூடிவந்து, சூநேமிலே பாளயமிறங்கினார்கள்; சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள். 5 சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக்கொண்டிருந்தது. 6 சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறுஉத்தரவு அருளவில்லை. 7 அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள். 8 அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம்பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான். 9 அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள். 10 அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான். 11 அப்பொழுது அந்த ஸ்திரீ: உமக்கு நான் யாரை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான். 12 அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள். 13 ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள். 14 அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள்; அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்துகொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான். 15 சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறுஉத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான். 16 அதற்குச் சாமுவேல்: கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்? 17 கர்த்தர் என்னைக்கொண்டு சொன்னபடியே செய்து முடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார். 18 நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றையதினம் உனக்கு இந்தப்பிரகாரமாகச் செய்தார். 19 கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக் கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான். 20 அந்தக்ஷணமே சவுல் நெடிதாங்கிடையாய்த் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் இராப்பகல் முழுதும் ஒன்றும் சாப்பிடாதிருந்தபடியினால், அவன் பலவீனமாயிருந்தான். 21 அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை என் கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன். 22 இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைப் புசிப்பீராக; அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள். 23 அவனோ தட்டுதல்பண்ணி, நான் புசிக்கமாட்டேன் என்றான்; ஆனாலும் அவனுடைய ஊழியக்காரரும் அந்த ஸ்திரீயும் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற்கேட்டு, தரையிலிருந்து எழுந்திருந்து கட்டிலின்மேல் உட்கார்ந்தான். 24 அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது; அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டு, 25 சவுலுக்கும் அவன் ஊழியக்காரருக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள்; அவர்கள் புசித்து எழுந்திருந்து, அந்த இராத்திரியிலேயே புறப்பட்டுப்போனார்கள்.

29

1 பெலிஸ்தர் தங்கள் சேனைகளையெல்லாம் ஆப்பெக்கிலே கூடிவரச்செய்தார்கள்; இஸ்ரவேலர் யெஸ்ரயேலிலிருக்கிற துரவண்டையிலே பாளயமிறங்கினார்கள். 2 அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் நூறும் ஆயிரமுமான சேர்வைகளோடே போனார்கள்; தாவீதும் அவன் மனுஷரும் ஆகீசோடே பின்தண்டிலே போனார்கள். 3 அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள்: இந்த எபிரெயர் என்னத்திற்கு என்றார்கள்; ஆகீஸ் அவர்களைப் பார்த்து: இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த இந்தத் தாவீது இத்தனை நாட்களும் இத்தனை வருஷங்களும் என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை என்றான். 4 அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிப்போகும்படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்குச் சத்துருவாயிராதபடிக்கு, இவன் நம்மோடே கூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா? 5 சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இந்தத் தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள். 6 அப்பொழுது ஆகீஸ் தாவீதை அழைத்து: நீ உத்தமன் என்றும், நீ பாளயத்தில் என்னோடே போக்கும் வரத்துமாயிருக்கிறது என் பார்வைக்கு நல்லது என்றும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றையவரைக்கும் நான் உன்னில் ஒரு பொல்லாப்பும் காணவில்லை; ஆகிலும் பிரபுக்களின் பார்வைக்கு நீ பிரியமானவன் அல்ல. 7 ஆகையால் பெலிஸ்தருடைய பிரபுக்கள் உன்மேல் தாங்கல் அடையாதபடிக்கு, இப்போது சமாதானத்தோடே திரும்பிப் போய்விடு என்றான். 8 தாவீது ஆகீசை நோக்கி: ஏன்? நான் செய்தது என்ன? நான் வந்து, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களோடே யுத்தம்பண்ணாதபடிக்கு, நான் உம்மிடத்தில் வந்த நாள்முதற்கொண்டு இன்றையவரைக்கும் உமது அடியேனிடத்தில் கண்டுபிடித்தது என்ன என்றான். 9 ஆகீஸ் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என் பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடேகூட யுத்தத்திற்கு வரக்கூடாது என்று பெலிஸ்தரின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள். 10 இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடே வந்த உன் ஆண்டவனுடைய வேலைக்காரரைக் கூட்டிக்கொண்டு, விடியற்காலத்திலே வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான். 11 அப்படியே தாவீது அதிகாலையில் தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தரின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோவெனில் யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.

30

1 தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின்மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, 2 அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்கள் வழியே போய்விட்டார்கள். 3 தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள். 4 அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள். 5 தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், கர்மேல் ஊராளான நாபாலின் மனைவியாயிருந்த அபிகாயிலும், சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள். 6 தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். 7 தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான். 8 தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார். 9 அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த அறுநூறுபேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றண்டைக்கு வந்தபோது அங்கே சிலர் நின்றுபோனார்கள். 10 தாவீதோ, நானூறுபேரோடுங்கூடத் தொடர்ந்துபோனான்; இருநூறுபேர் விடாய்த்துப்போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்றுபோனார்கள். 11 ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, புசிக்க அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து, 12 அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், வற்றலான இரண்டு திராட்சப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்ட பின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இராப்பகல் மூன்றுநாளாய் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான். 13 தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்துதேசத்துப் பிள்ளையாண்டான்; மூன்று நாளைக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான். 14 நாங்கள் கிரேத்தியருடைய தென்புறத்தின்மேலும், யூதாவுக்கடுத்த எல்லையின்மேலும், காலேபுடைய தென்புறத்தின்மேலும், படையெடுத்துப்போய் சிக்லாகை அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டோம் என்றான். 15 தாவீது அவனை நோக்கி: நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டு போவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என்றான். 16 இவன் அவனைக் கொண்டுபோய் விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, புசித்துக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர் தேசத்திலும் யூதாதேசத்திலும் கொள்ளையிட்டுவந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள். 17 அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள்மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை. 18 அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான். 19 அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான். 20 எல்லா ஆடுமாடுகளையும் தாவீது பிடித்துக்கொண்டான்; அவைகளைத் தங்கள் மிருகஜீவன்களுக்கு முன்னாலே ஓட்டி, இது தாவீதின் கொள்ளை என்றார்கள். 21 விடாய்த்துப்போனதினாலே தாவீதுக்குப் பின்செல்லாமல், பேசோர் ஆற்றண்டையிலே தங்கியிருந்த இருநூறுபேரிடத்துக்குத் தாவீது வருகிறபோது, இவர்கள் தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனத்திற்கும் எதிர்கொண்டு வந்தார்கள்; தாவீது அந்த ஜனத்தினிடத்தில் சேர்ந்து, அவர்கள் சுகசெய்தியை விசாரித்தான். 22 அப்பொழுது தாவீதோடே நடந்து வந்த மனுஷரில் பொல்லாதவர்களும் பேலியாளின் மக்களுமான எல்லாரும்: அவர்கள் எங்களோடே வராதபடியினால் நாங்கள் திருப்பிக்கொண்ட கொள்ளையுடைமைகளில் அவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை; அவர்களில் ஒவ்வொருவனும் தன்தன் மனைவியையும் தன்தன் பிள்ளைகளையுமே அழைத்துக்கொண்டு போகட்டும் என்றார்கள். 23 அதற்குத் தாவீது: என் சகோதரரே, கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படிச் செய்யவேண்டாம்; கர்த்தர் நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாய் வந்திருந்த அந்தத் தண்டை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார். 24 இந்தக் காரியத்தில் உங்கள் சொற்கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அவ்வளவு ரஸ்துக்களண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான். 25 அப்படியே அந்நாள்முதற்கொண்டு நடந்துவருகிறது; அதை இஸ்ரவேலிலே இந்நாள்வரைக்கும் இருக்கும் கட்டளையும் பிரமாணமுமாக ஏற்படுத்தினான். 26 தாவீது சிக்லாகுக்கு வந்தபோது, அவன் கொள்ளையாடினவைகளிலே தன் சிநேகிதராகிய யூதாவின் மூப்பருக்குச் சிலவற்றை அனுப்பி: இதோ, கர்த்தருடைய சத்துருக்களின் கொள்ளையில் உங்களுக்கு உண்டாயிருக்கும் ஆசீர்வாத பாகம் என்று சொல்லச்சொன்னான். 27 யார்யாருக்கு அனுப்பினானென்றால், பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும், 28 ஆரோவேரில் இருக்கிறவர்களுக்கும், சிப்மோத்தில் இருக்கிறவர்களுக்கும், எஸ்தெமோவாவில் இருக்கிறவர்களுக்கும், 29 ராக்காலில் இருக்கிறவர்களுக்கும், யெராமியேலியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், கேனியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், 30 ஒர்மாவில் இருக்கிறவர்களுக்கும், கொராசானில் இருக்கிறவர்களுக்கும், ஆற்றாகில் இருக்கிறவர்களுக்கும், 31 எப்ரோனில் இருக்கிறவர்களுக்கும், தாவீதும் அவன் மனுஷரும் நடமாடின எல்லா இடங்களில் இருக்கிறவர்களுக்கும் அனுப்பினான்.

31

1 பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள். 2 பெலிஸ்தர் சவுலையும் அவன் குமாரரையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் குமாரராகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூகாவையும் வெட்டிப்போட்டார்கள். 3 சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு, 4 தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான். 5 சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன் பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடேகூடச் செத்துப்போனான். 6 அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் ஆயுததாரியும், அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப்போனார்கள். 7 இஸ்ரவேலர் முறிந்தோடினார்கள் என்றும், சவுலும் அவன் குமாரரும் செத்துப் போனார்கள் என்றும், பள்ளத்தாக்குக்கு இப்பாலும் யோர்தானுக்கு இப்பாலும் இருந்த இஸ்ரவேலர் கண்டபோது, அவர்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் வந்து, அவைகளிலே குடியிருந்தார்கள். 8 வெட்டுண்டவர்களை உரிந்துகொள்ள, பெலிஸ்தர் மறுநாள் வந்தபோது, அவர்கள், சவுலும் அவன் மூன்று குமாரரும் கில்போவா மலையிலே விழுந்து கிடக்கிறதைக் கண்டு, 9 அவன் தலையை வெட்டி, அவன் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களின் கோவில்களிலும் ஜனங்களுக்குள்ளும் செய்தியைப் பிரசித்தப்படுத்தும்படி, அவைகளைப் பெலிஸ்தர் தேசத்திலே சுற்றிலும் அனுப்பி, 10 அவன் ஆயுதங்களை அஸ்தரோத் தேவனுடைய கோவிலிலே வைத்து, அவன் உடலைப் பெத்சானின் அலங்கத்திலே தூக்கிப்போட்டார்கள். 11 பெலிஸ்தர் சவுலுக்குச் செய்ததைக் கீலேயாத்தேசத்து யாபேஸ் பட்டணத்தார் கேட்டபோது, 12 அவர்களிலே பலசாலிகள் எல்லாரும் எழுந்து இராமுழுதும் நடந்துபோய், பெத்சானின் அலங்கத்திலிருந்த சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவைகளை அங்கே தகனம் பண்ணி, 13 அவர்களுடைய எலும்புகளை எடுத்து, யாபேசிலிருக்கிற தோப்பிலே அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்.




AMAZING GRACE BIBLE INSTITUTE